|
பிரபாகரன்" என்ற பெயரில் படம் இயக்கிய இயக்குனர் சென்னையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத கட்டுமிராண்டித்தனம்
- ருத்ரன்
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய படம் எடுத்த சிங்கள டைரக்டருக்கு அடி, உதை விழுந்தது.சென்னை கே.கே.நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகே ஜெமினி கலர் லேப் உள்ளது. இந்த லேப்பில், `பிரபாகரன்' என்ற சிங்கள மொழிப்படம் கலர் பிரிண்ட் எடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது.இந்த தகவலை கேள்விப்பட்டதும், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குனர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஜெமினி கலர் லேப் முன்பு குவிந்தனர்.
`பிரபாகரன்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சினிமாவில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி தவறாக சித்தரித்திருப்பதாக கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சத்தம் கேட்டு லேப்பில் இருந்து வெளியே வந்த அந்த சினிமா படத்தின் இயக்குனர் பெரீஷ் என்பவரையும் அடித்து உதைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து `பிரபாகரன்` சினிமா படத்தை, 27-ந் தேதி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு போட்டுக் காண்பிப்பது எனவும், அவர்கள் படம் குறித்து ஆட்சேபம் தெரிவிக்காத பட்சத்தில் படத்தை பிரிண்ட் எடுக்க அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
புலிகள் கருத்துச்சுதந்திரத்தை மதிப்பதில்லை. புலிகளுக்கு எதிராக கருத்துச் சொல்பவர்களை அவர்கள் விட்டுவைப்பதில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் கூட தமக்கு எதிராக கருத்துக்கள் சொல்வதை புலிகள் அனுமதிப்ப்பதுமில்லை. இத்தகைய ஒரு பாசிச அமைப்பை ஆதரிப்பவர்கள் ஜனநாயக கோட்பாடுகளை மதிப்பவர்களாக இருப்பவர்கள் என எதிர்பார்த்தால் அது மடமைத்தனமாகும். பொதுவாக புலிகளின் சிந்தனைப்போக்குகளைக் கொண்டிருப்பவர்கள்தான் புலிகளை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். புலிகளை விமர்சனம் செய்வதைக் கூட இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் புலிகளை ;ஆதரிக்கும் சிறிய அமைப்புக்களின் தலைவர்களும் தொண்டர்களும் புலிகளின் பாணியில் தமது காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிற சம்பவம் தான் மேற்படி சம்பவம்.
பிரபாகரன் பற்றி சிங்கள இயக்குனர் எடுத்துள்ள திரைப்படத்தைப் பார்க்காமலே அவரைத் தாக்கியுள்ளார்கள் இந்தக் குண்டர்கள். இதற்கு பி.பி.சி வானொலியால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பியபடி பதிலளித்திருக்கிறார் சுப வீரபாண்டியன். படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் படத்தில் புலிகள் அமைப்பு கொச்சைப்படுத்தப்பட்டதாக பதிலளிக்க முற்பட்டிருக்கிறார். ஏன் இயக்குனரைத்தாக்கினீர்கள் என கேட்கப்பட்டபோது அதற்கு தம்முடன் வந்தவர்கள் இயக்குனரைத்தாக்கியதாக மேலும் கூறியிருக்கிறார். என்ன ஏது என்கிற விபரம் தெரியாமல் அடியுங்கடா என்றவுடன் தாக்குவது இப்படி ஒரு கூட்டம்தான் இந்த அமைப்புக்களின் தொண்டர் படை. சுப.வீரபாண்டியனும் விடுதலைச்சிறுத்தைகளும் மேற்படி சம்பவத்தின் மூலம் பகிரங்கமாக அம்பலமாகியுள்ளனர்.
ஏற்கனவே புலிகளின் பெயர் சர்வதேச அளவில் கெட்டுப்போயிருக்கிறது. இருக்கிற கொஞ்ச நஞ்ச மதிப்பையும் அடியோடு இல்லாதொழிப்பது என்பதில் விடுதலைச் சிறுத்தைகளும் சுப வீரபாண்டியனும் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். கலாச்சார சீரழிவுகள் கடைந்தெடுத்த வன்முறைகள் என தமிழ்சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் நாற்றமெடுத்து கிடக்கும்போது அதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாதவர்கள் பிரபாகரன் படத்திற்காக வரிந்து கட்டிக்கொண்டு வன்முறையில் இறங்கியதற்கான காரணம் புலிகளின் பணம் செய்யும் காரியம் என்றார் எனது நண்பர். ஒருவகையில் அதுதான் உண்மையும் கூட.
பட ட்ரெயிலரைப் பார்க்க http://www.prabhakaranfilm.com/
________________________________________________________________________________
பிரபாகரன் திரைப்படம் தொடர்பான வெளிவந்த செய்திகள்
'பிரபாகரன்' விரைவில் ரிலீஸ்!
மேலும் புதிய படங்கள் இலங்கை இனப் போரை கதைக் கருவாகக் கொண்டு, பிரபாகரன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு சென்சார் வாரியம் அனுமதி கொடுத்து விட்டதால் அந்தப் படம் விரைவில் ரிலீஸாகிறது. இலங்கையைச் சேர்ந்தவர் துஸ்கரா பெரீஸ். சிங்கள இயக்குநரான இவர் பிரபாகரன் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் இலங்கை இனப் போர் குறித்த கதைப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இனப் போர், அதனால் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சந்தித்து வரும் துயரங்கள், சிரமங்கள், இந்தப் பிரச்சினை தீராமல் நீண்டு கொண்டிருப்பதற்கு யார் காரணம், பிரச்சினையின் மூல வேர் என்ன என்பது குறித்து இப்படத்தில் அலசியுள்ளாராம் பெரீஸ். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில உள்ள ஒரு தற்கொலைப் படை நபர் அங்கிருந்து தப்பி வருகிறார். தற்கொலைப் படையில் சேர்ந்ததன் காரணம் குறித்து அவர் விளக்குகிறார். இதுதான் படத்தின் முக்கிய கதை. இதன் பின்னணியில் இனப் பிரச்சினை, சண்டை, துயரம், அவலம் ஆகியவற்றை விளக்கியுள்ளாராம் பெரீஸ்.இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள முதல் படம் பிரபாகரன் என்கிறார் பெரீஸ். மனிதாபிமான கண்ணோட்டத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. யாருக்கும் சாதகமாகவும், யாருக்கும் பாதகமாகவும் இதில் கருத்துக்கள் சொல்லப்படவில்லை என்றும் பெரீஸ் தரப்பு விளக்குகிறது.ரோமில் திரைப்படக் கலையைக் கற்றவராம் பெரீஸ். படம் முழுக்க இலங்கை இனப் பிரச்சினையை அலசியுள்ளதாக கூறும் பெரீஸ், ஆனால் இதற்கும் இலங்கை அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறுகிறார்.
பிரபாகரன் சிங்களத் திரைப்படம் தணிக்கைக்குழு அனுமதி !
இலங்கை உள்நாட்டுப் போரை மையமாக வைத்து பிரபாகரன் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட இலங்கை தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது.துஷ்காரா பெரிஸ் என்ற சிங்கள டைரக்டர் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் இறுதியில் திரைக்கு வருகிறது.புலிகள் இயக்கத்தில் மனித வெடிகுண்டாக உருவாக்கப்படும் ஒருவர், அங்கிருந்து தப்பிச் செல்வதை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் உள்நாட்டுப் போருக்கு சிங்களவர்களும், தமிழர்களும் காரணம் அல்ல. அவர்கள் போரை விரும்பவும் இல்லை என்பதை படத்தில் விளக்கியிருப்பதாக டைரக்டர் துஷ்காரா தெரிவித்துள்ளார்.இலங்கைப் போரைப் பற்றி புலிகள் இயக்கம் சார்பில் இதுவரை ஆறு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக சிங்கள மொழியில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக துஷ்காரா மேலும் தெரிவித்தார்.
பிரபாகரனை' பார்க்க ஜனாதிபதிக்கு விருப்பம்
`பிரபாகரனை' பார்க்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ளார். இளம் சிங்கள பட இயக்குநரான துஷார பீரிஸ் இயக்கியுள்ள `பிரபாகரன்' என்ற படத்திற்கு அண்மையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கை சபை அனுமதி வழங்கியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தப்பியோடும் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரைப் பற்றிய கதையே பிரபாகரனாகும். பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரின் பூரண ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட `பிரபாகரன்' திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் திரையிடப்படவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திலுள்ள திரையரங்கில் சிரேஷ்ட இராணுவத் தளபதிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவும் இந்தத் திரைப்படத்தை பார்வையிட்டுள்ளார். இந்தப் படத்தை பார்க்க விரும்புவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இப்படம் திரைக்கு வரும்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
|