|
வன்முறையை தூண்டினார் அத்வானி !பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு வாக்குமூலம் !!
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில், பாஜக மூத்த தலைவர் அத்வானி அயோத்தியில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினார் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி அஞ்சுகுப்தா வாக்குமூலம் அளித்தார்.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை கொடிய மதவெறி யுடன் பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இடித்து நொறுக்கினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன் றத்தில் நடைபெற்று வரு கிறது.
மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் அத்வானியின் தனிப்பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர் அஞ்சு குப்தா . இவர் 1990ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்தவர். அவரிடம் வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடந்தது. அத்வானி மற்றும் பாஜக தலைவர்களும் வினய் கத்யார், உமா பாரதி, சாத்வி ரிதம்பரா ஆகியோரும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினர் என்று விசாரணையின் போது அஞ்சு குப்தா வாக்கு மூலம் அளித்தார்.
அத்வானியும் இதர பாஜக தலைவர்களும் 16ம் நூற்றாண்டு புராதன சின்னமான பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என திரும்பத் திரும்ப கூறினர் என்றும் அவர் தெரிவித்தார்.
மசூதி இடிப்பு நாளின் போது அயோத்தியில் வன்முறையைத் தூண்டும்விதமாக பேசிய அத்வானி, சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிவதில் ஆர்வமாக இருந்தார். அதனை தெரிந்து கொள்ள, என்னிடம், மசூதி வன்முறை நிகழ்வு குறித்து கேட் டுக்கொண்டே இருந்தார். அவரிடம், மசூதி உச்சியின் மீது ஏற, பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியில் சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர் என தெரிவித்தேன் என்று அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் கூறினார்.
“இதை கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு அத்வானி செல்ல விரும்பினார். மசூதி இடிப்பு இடத்திற்கு சென்று ஏதேனும், விபரீதம் ஏற்பட்டால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிடும் என்றும் எனவே பாபர் மசூதி இடத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப் பட்டது. பின்னர், அங்கு உமாபாரதியை, அத்வானி அனுப்பினார். மசூதி இடத்தை பார்த்துவந்த உமாபாரதி சிலர் கையில் இரும்பு கம்பிகள் மற்றும் மசூதி கோபுரத்தை உடைப்பதற்கான கருவிகளுடன் மேலே ஏறிக்கொண்டிருக்கிறார்கள் என அத்வானியிடம் கூறினார். பின்னர் மசூதியின் கூம்பு உடைக்கப்பட்டு கீழே விழுந்ததும், உமா பாரதியும், ரிதம்பராவும் கட்டித் தழுவி கொண்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். அவர்கள் அத்வானியையும் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மசூதி இடிப்பை நிறுத்த எந்தத் தலைவரும் வேண்டுகோள் விடுக்கவில்லை” என, ஐபிஎஸ் அதிகாரி அஞ்சுகுப்தா நீதிமன்றத்தில் விரிவாக தெரிவித்தார். அஞ்சுகுப்தா தற்போது தில்லியில் உள்ள ரா உளவுப் பிரிவில் பணியாற்றுகிறார்..
கடந்த 92ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புநாளில் அத்வானி மற்றும் இதர சங்பரிவார் கும்பலின் தலைவர்களது செயல்பாடுகள் குறித்து, அஞ்சு குப்தா ஏற்கெனவே விரிவான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து அத் வானி, ஜோஷி, உமாபாரதி, கத்யார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, ரிதம்பரா ஆகியோர் மீது, 1993ம் ஆண்டு சிபிஐ கிரிமினல் வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சு குப்தாவிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது, இந்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தாவிடம் குறுக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
|