|
2011 ம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் பற்றிய புகைச்சல்களை அடக்க அரசு உடனடியாக விரிவானதும் மற்றும் முழுமையானதுமான மீளாய்வினை மேற்கொள்ள வேண்டும்.
- பேராசிரியர்.ஆர்.பி.குணவர்தன
2011ம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானதின் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் விளைவுகளையும் மனதை நெருடும் வலியுடன் நான் அவதானித்துக் கொண்டிருந்தேன்.பரீட்சை முடிவுகளில் பல தவறுகள் மற்றும் விடுபடல்கள் இருப்பதாக ஏராளமான முறைப்பாடுகள் வெளியானதுடன், அதைப்பற்றி ஆராய ஜனாதிபதியினால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டும் உள்ளது.
ஸ்ரீலங்காவில் நடத்தப்படும் தேசிய பரீட்சைகளில் இந்த க.பொ.த உயர்தர பரீட்சை மிகவும் முக்கியமானதாகவும் மிக உயர்ந்த போட்டித் தன்மையும் உள்ள பரீட்சையுமாகும், அது எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் பரீட்சையாகவும் உள்ளது. அநேகமான நாடுகளில் நடப்பதைப் போலில்லாமல் இந்தப் பரீட்சையில் காண்பிக்கும் செயல் திறன் மட்டும்தான் ஸ்ரீலங்காவில் பல்கலைக் கழகங்களுக்கான அனுமதியின் ஒரேயொரு அளவுகோலாகப் பயன்படுகிறது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற தொழில் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் அனுமதி பெறவும் தகுதிவாய்ந்த ஒரு அளவுகோலாக இது பயன் படுகிறது.பல ஆண்டுகளாக இந்தப் பரீட்சை மிக உயர்ந்த சர்வதேச தரங்களைப் பேணி வருவதுடன் உலகெங்குமுள்ள மதிப்புமிகு சர்வகலாசாலைகளில் நமது மாணவர்கள் அனுமதி பெறவும் வழி செய்கிறது. க.பொ.த உயர்தர பரீட்சையில் தங்கள் திறமையை நன்கு வெளிக்காட்டிய எங்கள் மாணவர்கள்,அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மிகத் திறமையாகச் செயற்பட்டு வருவதை தனிப்பட்ட ரீதியில் நான் நன்கு அறிவேன்.
2011 - க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள்
இந்தமுறை வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளிப்படையாகவே சவால்களை எதிர்கொள்ள நேரிட்டன. இந்தப் பரீட்சை சம்பந்தமான பொதுமக்களின் நம்பிக்கையை எவ்வளவு விரைவில் மீட்க முடியுமோ அவ்வளவு விரைவாக மீட்டெடுப்பது நிச்சயமாக அவசியம். பிரச்சினையின் மூலகாரணம் என்ன என்பதை புரிந்து கொள்வதற்காக பரீட்சைத் திணைக்களத்தில் மதிப்பெண்கள் செயற்படுத்தப்பட்ட விதம் குறித்து முழுமையாக ஆராயப்பட வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் மீண்டும் நிகழாதவாறு தடுக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விடயத்தை மூடிமறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும், ஸ்ரீலங்காவில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களைப் பாதிக்கத் தக்க விளவுகளையும் மற்றும் குழப்பங்களையும் ஏற்படுத்தலாம் என ஆரம்பத்திலேயே கவலையை ஏற்படுத்தியது. இத்தகைய பின்னணிதான் என்னை இந்தக் கட்டுரையை எழுதும்படி கட்டாயப்படுத்தியது.
நான் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியபோது பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்களை வரிசைப்படுத்துவதற்காக இசற் (ண) வரிசை மதிப்பெண்களை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை நியமித்து கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தனிப்பட்ட ரீதியில் பொறுப்பாக இருந்துள்ளேன். வௌ;வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை அவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் வரிசைப் படுத்துவதற்கு இந்த இசற்(ண ) மதிப்பெண் முறை மிகவும் உயாந்த ஒன்றாக இருந்தது. குறைந்தளவு மதிப்பெண்களைப் பெறுவதற்குக்கூட கடினமான பாடங்கள் உள்ள அதே பிரிவிலேயே, கூடியளவு மதிப்பெண்களை இலகுவாகப் பெறக்கூடிய பாடங்களும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உள்ளன. இசற்(ண ) மதிப்பெண் முறை இந்த மதிப்பெண்கள் யாவற்றையும் ஒரே மட்டத்துக்கு கொண்டு வரும், எனவே அர்த்தமுள்ள தர வரிசை அமைப்பு அமையக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தரவரிசை நீதியானதும் மிகவும் நம்பிக்கையானதும் என்பதை நிரூபிததுள்ளதுடன் வித்தியாசமான பாடங்கள்,பாடங்களின் எண்ணிக்கை, புள்ளியிடும் வித்தியாசமான முறை, மற்றும் வௌ;வேறு பாடத்திட்டங்கள் (பழைய பாடத்திட்டம் மற்றம் பதிய பாடத்திட்டம்) போன்றவற்றினால் உண்டாகும் முரண்பாடுகளைக் குறைப்பதற்கு இது எளிமையானதும் சிறந்ததுமான தெரிவாகும்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2000 – 2001 காலப்பகுதியில் அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பனவற்றின் ஆலோசகராக கடமையாற்றிய பேராசிரியர் ஆர்.ஓ. தாற்றில், இது சம்பந்தமாக விரிவான திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.இந்த நடைமுறை 2001ம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய இரண்டு குழுக்களிடையே (ஒரு குழுவுக்கு 3பாடங்களும் மற்றொரு குழுவுக்கு 4 பாடங்களும் வழங்கப்பட்டிருந்தன) வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டது.அப்போதிலிருந்து 2011 ம் ஆண்டுவரை இந்தத் திட்டம் சீரான நடைமுறையில் இருந்து வந்தது.
2011ம் ஆண்டில் நடந்த க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளைப் பற்றிய இரண்டு விடயங்கள் பிரதானப் படுத்தப்பட்டிருக்கின்றன.
- பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மாவட்ட மற்றும் நாடளாவிய தர வரிசைகளில் பிழைகள் இருப்பது
- வௌ;வேறு பாடத்திட்டங்கள் (பழைய பாடத்திட்டம் மற்றம் பதிய பாடத்திட்டம்) உள்ள இரண்டு குழுக்களிடையே இசற் மதிப்பெண்ணைக் கணக்கிட பயன்படுத்திய சூத்திரத்தைப் பற்றி நிபுணர்கள் எழுப்பியுள்ள சர்ச்சை.
இந்த இரண்டு பிரச்சினைகளுமே சம அளவு முக்கியத்துவம் உள்ளதாக இருப்பதினால் நிலமையை மேலும் தாமதப் படுத்தாமல் உடனடியாக சீர்ப்படுத்துவது மிகவும் அவசியம்.
தர வரிசைப்படுத்துவதில் தவறுகள் ஏற்படுத்தப்பட்டதுக்கு , பரீட்சைத் திணைக்களத்தினால் தவறான தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டமை,மற்றும் செயல்முறைத் தவறுகள் இடம் பெற்றமைகளே காரணம் என நான் பத்திரிகைகளில் படித்தேன்.சுயாதீனமான சரிபார்த்தல்கள் மற்றும் தணிக்கைகள் மேற்கொள்ளப் படாதது, வருந்தத் தக்க விடயமாகும்.இப்படியான முறையில்தானா ஸ்ரீலங்காவில் தேசிய பரீட்சைகள் நடத்தப்படுகின்றன? இது உண்மையானால் எப்படி நாங்கள் ஏனைய தரவுகளினதும் மற்றும் இசற்(ண ) மதிப்பெண்களினதும் துல்லியத் தன்மையை ஏற்றுக் கொள்ள முடியும்? எனவே பரீட்சை பெறுபேறுகளின் துல்லியத் தன்மையை உறுதிப் படுத்துவதற்கு சகல தரவுகளின் உள்ளீடுகளையும் மற்றும் செயல்பாட்டு வழி முறைகளையும் மீளவும் சரிபார்க்க வேண்டும்.
அடுத்ததாக இதில் தொடர்புள்ள அமைச்சுகள்,இந்த முறை இசற்(ண ) மதிப்பெண்ணை கணக்கிடும் சூத்திரத்தை தெரிவு செய்யும் பணியில் அசல் ஆலோசகரைப் பயன்படுத்த தவறிவிட்டன.குறிப்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் இந்த இசற்(ண ) மதிப்பெண் முறை அறிமுகப் படுத்தப்பட்ட வரலாற்றையும் மற்றும் அசலாக இந்த முயற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட ஆலோசகர்களைப் பற்றியும் மிக நன்றாகவே அறிவார்கள்.அப்படியிருந்தும் 2001ல் இந்தத் திட்டத்தை வடிவமைத்த பேராசிரியர். தாற்றில்,இந்தமுறை இந்தக் குழுவில் இடம்பெறவில்லை. 13 ஜனவரி, 2012 ஐலன்ட் பத்திரிகையில், பேராசிரியர். தாற்றில் வெளிப்படுத்தியிருக்கும் கூற்றுப்படி,புதிய குழுவினால் முன்மொழியப்பட்ட சூத்திரம் பிழையானது மற்றும் அதன் காரணமாக க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் சம்பந்தமான சிக்கல் இன்னும் அதிகமான குழப்பத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த முறை ஒரு பாடத்தின் சராசரி மற்றும் மாறுபாடு ஆகியவை புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம் ஆகிய இரண்டுக்கும் ஒன்றாகக் சேர்க்கப்பட்டே இசற்(ண ) மதிப்பெண் கணிப்பிடப்பட்டிருக்கிறது.இது நிபுணர் குழாத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு அடிப்படைத் தவறு.
இப்படியான ஒரு நிலையில் இரண்டு மாணவ குழுக்களும் இரண்டு வௌ;வேறு பிரிவினராக கருதப்பட்டு ஒவ்வொரு குழவினதும் இசற்(ண ) மதிப்பெண் தனித்தனியாக கணிக்கப்பட்டிருக்க வேண்டும்.பின்னர் மூன்று பாடங்களினதும் சராசரி இசற்(ண ) மதிப்பெண்கள் மாணவர்களை தர வரிசைப்படுத்துவதற்கு பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். 2001ம் ஆண்டு நாங்கள் கொண்டிருந்த இருவேறு மாணவ குழுக்களுக்கும் (மூன்று பாடங்கள் மற்றும் நான்கு பாடங்கள்)இத்தகைய ஒரு முறையைத்தான் 2001ல் நாங்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தினோம்.
துரதிருஷ்டவசமாக இந்த விடயத்தைப்பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி நியமனக் குழுவினர்,தவறான சூத்திரத்தைப் பயன்படுத்தி இசற்(ண ) மதிப்பெண்கள் கணிக்கப்பட்ட முக்கிய விடயத்தை கவனிக்காமல் விட்டுவிட்டனர். இது சகல இசற்(ண ) மதிப்பெண்களையும் பாதித்துள்ளது,மற்றும் இந்தத் தவறான இசற்(ண ) மதிப்பெண்களைப் பயன்படுத்தி தரவரிசையை நிர்ணயித்ததும்கூட பிழையான விடயம். இதன்படி அனைத்து பாடப் பிரிவுகளினதும் இசற்(ண ) மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகள் சரிசெய்யப்படவேண்டியது அவசியம்.
ஒரு ஆசிரியர் தொழிற்சங்கம் இந்த விடயம் சம்பந்தமாகப் பரீட்சைத் திணைக்களத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதைப்பற்றி பரிசீலித்து வருவதாக நான் பத்திரிகைகளில் படித்தறிந்தேன். இது நடைபெற்றால்,சந்தேகமில்லாமல் அது மாதக்கணக்கில் இல்லாவிட்டால் வருடக்கணக்கில் இழுபடும் ஒரு தொடர்ச்சியான யுத்தமாக இருக்கும். அத்தகைய நடவடிக்கை காரணமாக இந்தப் பரீட்சையின் முடிவுகள் சிறிது காலத்துக்கு தகுதியற்றதாக மாறக்கூடிய ஒரு தீவிரமான நிலைக்கு இதனை இட்டுச் செல்லும். அதன் காரணமாக இந்தப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் ஸ்ரீலங்காவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்திலும் அனுமதியினை பெறக்கூடிய தகுதியினை அடைய முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப் படுவார்கள். இது மிகத் தீமையானதும் மற்றும் எங்கள் இளந் தலைமுறையினரின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீவிரமான ஒரு சூழ்நிலையாகும்.இது நடைபெற்றால்,அது ஸ்ரீலங்காவின் கல்வி வரலாற்றில் ஏற்பட்ட மிகத் தீவிரமான ஒரு பின்னடைவாகவும் இருக்கும்.எனவே சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவினரும் எந்த விலை கொடுத்தாவது இத்தகைய ஒரு சூழ்நிலை உருவாகாது தவிர்க்க ஒரு கூட்டு முயற்சி ஒன்றினை மேற்கொள்ள வேண்டும்.
க.பொ.த. உயர்தர பரீட்சையை ஏப்ரல் மாதத்தில் நடத்த வேண்டும்
கல்வி சம்பந்தமான அதிகாரிகளின் கவனத்தை அவசரமாக ஈர்க்க வேண்டிய அவசியமுள்ள மற்றொரு விடயமும் உள்ளது.2000 – 2001 காலப்பகுதியில் மிக வலுவான சில காரணங்களினால் க.பொ.த. உயர்தர பரீட்சையை ஆகஸ்ட் மாதத்துக்குப் பதிலாக ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கினோம். நாங்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவந்த உடனேயே பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தோம்,அதன் காரணமாக முதல் தடவையாக க.பொ.த. உயர்தர பரீட்சை 2002ல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது.இப்போது அது உத்தியோகத்தர்களின் வசதிக்காக ஏப்ரல் மாதத்தில் பரீட்சை நடத்துவதால் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் யாவற்றையும் புறக்கணித்துவிட்டு திரும்பவும் ஆகஸ்ட் மாதத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. இந்த மாற்றத்தினால் ஏற்படக்கூடிய அனுகூலங்களைப் பற்றி சுருக்கமாக விளக்குகிறேன். உயர்தர பரீட்சை ஆகஸ்ட்டில் நடைபெற்றால், சாதாரண தரப் பரீட்சைக்கு அதற்கு முந்திய வருடம் டிசம்பர் மாதத்தில் தோற்றி சித்திபெற்ற புதிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை அடுத்த வருடம் செப்டம்பர் மாதம்வரை ஆரம்பிக்க முடியாது. இதன் விளைவாக,இந்த மாணவர்கள் கிட்டத்தட்ட 9 மாதங்கள் வரை காத்திருந்து தங்கள் பொன்னான காலத்தை வீணடிக்க வேண்டியுள்ளது.அதேபோல ஆகஸ்ட்டில் பரீட்சையெழுதும் மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் அனுமதி பெறுவதற்காக அடுத்த வருடம் ஒக்டோபர் வரை காத்திருக்க வேண்டி ஏற்படுகிறது.
உயர்தர வகுப்புகளை இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து உயர்;தரப் பரீட்சைகளை 2014 ஏப்ரலில் நடத்துவதன் மூலம் இதைத் தவிர்க்க முடியும். இது றடைமுறைப்படுத்தப்பட்டால்,இந்தப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெறுபவர்களை காத்திருப்புக் காலத்தைக் குறைத்து அதே வருடத்தில்(2014) பல்கலைக் கழகங்களில் சேர்த்துக் கொள்ளலாம். இது திறமையாக இரு பகுதியினருக்கும் சேமிப்பை வழங்குகிறது,அதை அவர்கள் தங்கள் உயர்கல்விக்கு ஏற்றவகையில் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம்.
மேற்கண்ட உண்மைகளின் வெளிச்சத்தில் கீழ்காணும் படிமுறைகள் வலுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
- 2011 க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் பற்றிய சகல தரவுகளின் உள்ளீடுகள் மற்றும் அதன் செயற்பாட்டு வழிமுறைகள் பற்றிய் பூரணமானதும் மற்றும் விரிவானதுமான மறுபரிசீலனை,பார்வையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்படும் நிபுணர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்.
- இசற்(ண ) மதிப்பெண்கள் மீள்கணிப்புச் செய்வதற்காக முன்னர் 2001ல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு என்பனவற்றில் ஆலோசகராக கடமையாற்றிய பேராசிரியர். தாற்றில் அவர்களின் ஆலோசனைப்படி முன்னர் பயன்படுத்திய சரியான சூத்திரத்தைப் பயன்படுத்தி மறுபடியும் கணிக்க வேண்டும்.
- மேலே கூறிய (1) மற்றும் (2) ஆகிய நடைமுறைகளின்படி செயற்பட்டு திருத்தப்பட்ட முடிவுகளை வெளியிடல் வேண்டும்.
- 2014 ஏப்ரல் முதல் ஒவ்வொரு வருடமும் க.பொ.த. உயர்தர பரீட்சையை ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்வதோடு, பல்கலைக்கழக அனுமதியை பொதுவான ஒரு கல்வியாண்டில் நடைமுறைப் படுத்துவதற்கான செயல்முறையையும் ஓட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
நான் மிகுந்த அக்கறையுடன் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்களிடம் வேண்டிக் கொள்வது,நாட்டின் சிறந்த நலன்களை கருத்தில் கொண்டு மேற்குறித்த ஆலோசனைகளில் திவீர அக்கறையெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று. (அமெரிக்காவின் இந்தியானா அரச பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்.ஆர்.பி.குணவர்தன,முன்னாள் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர்,உயர்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தியின் செயலாளர், தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர்,பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் மற்றும் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியும் ஆவார்.)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
|