|
விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட இலங்கை அகதி முகாமை சேர்ந்த பெண் தீக்குளித்து தற்கொலை பாலியல் பலாத்காரம் நடந்ததாக போலீசார் மீது புகார்
விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை அகதி முகாமை சேர்ந்த பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பாலியல் பலாத்காரம் நடந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் மீது புகார் கூறப்பட்டு உள்ளது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கரூர் அருகே 2 குழந்தைகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முரளி (வயது 28), குமார் (29), பாண்டி (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் குமார், பாண்டி இருவரும் கரூர் அருகே உள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குமாரின் மனைவி பத்மாதேவியை (வயது28) பசுபதி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கடந்த 7-ந் தேதி அன்று அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பத்மாதேவியை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு வந்த பத்மாதேவி அன்று இரவு சுமார் 7 மணி அளவில் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த பத்மாதேவியை மற்ற அகதிகள் மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு கடந்த 21 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 7-35 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இரவில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
போலீசார் பத்மாதேவியை விசாரணைக்கு அழைத்து சென்று கற்பழித்து விட்டதாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் போராட்டம் நடந்தது. பத்மாதேவியிடம் ஏற்கனவே நீதிபதி மற்றும் ஆர்.டி.ஓ. வாக்குமூலம் பெற்று இருந்தனர். அதில் தன்னை போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
பத்மாதேவி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழாமல் தடுக்க கரூர் அரசு ஆஸ்பத்திரி, ராயனூர் அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
|