|
கொழும்பு நிர்வாகம் விரும்புவதையே ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் தமிழர்கள்"
இடிபாடடைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கும் கட்டிடங்களுக்கு அருகே அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) கூடாரங்கள் காணப்பட்டன. முற்றத்தில் ஆடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. சட்டி பானைகள், பைகள் ஆங்காங்கு காணப்பட்டன. அங்கு பொதுமக்கள் வாழ்வதைக் காட்டுவதாக இவை அமைந்திருந்தன.
மன்னார் விவசாயிகளிடமிருந்து பெருமளவானவற்றை 30 வருட கால யுத்தம் அபகரித்துவிட்டது. இப்போதும் பாதுகாப்பு தொடர்பான உணர்வுக்காகக் காத்திருப்பவர்களாக அந்த விவசாயிகள் காணப்படுவதாக பி.பி.சி. சிங்கள செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அச் செய்திச் சேவையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது;
"கவனமாக கதையுங்கள் பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்கின்றார்கள். வெளியாருடன் நாங்கள் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை என்று என்னை உபசரித்தவர்கள் எச்சரித்தனர். சோதனைச் சாவடிகளைத் தாண்டிச் செல்லும் சகல வாகனங்களும் படையினரால் மிக விழிப்புடன் சோதனையிடப்பட்டன. அவர்கள் களைப்புடன் காணப்பட்டாலும் நட்புறவுடன் இருப்பதாகத் தென்பட்டது. தெற்கிலிருந்து வரும் சிங்கள விருந்தினர் என அடையாளங்கண்டு கொண்டால் அவர்கள் விசேடமாக நட்புணர்வுடன் இருப்பதாகத் தோன்றியது. அவர்கள் தமது யுத்தம் தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருந்தனர். யுத்தம் மற்றும் அந்தப் பகுதியில் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி அவர்கள் விபரித்தனர். இப்போதும் தங்களை வெற்றியாளர்களாக அவர்கள் பார்க்கின்றனர்.
பொதுமக்களின் வாழ்க்கை இப்போதும் துன்பகரமானதாகவே பலருக்குக் காணப்படுகிறது. அண்மைக்காலம் வரை முகாம்களில் இருந்து திரும்பிய மக்கள் தமது பகுதிகளில் எதனையும் காணாதவர்களாக இருந்தனர். அவர்கள் விட்டுச் சென்ற எந்தப் பொருட்களும் அங்கு இல்லை.
2006 இல் உழவு இயந்திரத்தை விட்டுச் சென்றோம். பின்னர் 2 சொப்பிங் பைகளுடன் திரும்பி வந்தோம் என ஏ என்பவர் என்னிடம் கூறினார். தாக்குதல் இடம்பெற்ற போது மடு தேவாலயத்திற்கு அருகிலிருந்த தனது கிராமத்தை விட்டு ஏ யும் அவரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் வெளியேறியிருந்தனர். புலிகளின் உத்தரவுக்கமைய வெளியேறியிருந்த அவர்கள் 2009 இல் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சமாளித்து வந்துவிட்டனர். யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் அவர்கள் வந்துவிட்டனர்.
இராணுவம் எம்மை மெனிக்பாம் முகாமுக்கு அனுப்பியது. அங்கு ஒருவருடம் 2 மாத காலம் தங்கியிருந்தோம். எமது காணி எமக்குத் திரும்பக் கிடைத்தது. ஆனால் வீடு தரைமட்டமாகி இருந்தது என்று ஏ கூறினார். அவர் முருங்கனில் வசித்தார். சிங்களப் பெண்ணொருவரால் அவர் வளர்க்கப்பட்டிருந்தார். நன்றாக சிங்கள மொழி பேசினார். அவர் தென்பகுதியில் பணியாற்றியிருந்தார். இப்போது நாட் கூலியாக 600 ரூபாவிற்கு வேலை செய்கிறார்.
எங்களுக்கு எண்ணெய், அரிசி, பருப்பு, மா, சீனி கிடைக்கிறது. காய்கறி வாங்குவதற்கு எம்மிடம் பணம் இல்லை. கோதுமை மா மற்றும் முருங்கை இலை என்பவற்றுடன் எமது பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கிறோம். சில சமயம் வேட்டைக்குச் செல்வோம். காடுகளில் கண்ணி வெடிகள் நிரம்ப உள்ளன. ஆதலால் சிறிய விலங்குகளை வேட்டையாடி வாழ்கிறோம் என்று கூறியுள்ளார். திரும்பிச் சென்ற பலர் இதே கதையையே கொண்டுள்ளனர். பல வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. தமது இடிந்த வீடுகளுக்கு அருகில் சிறிய கூடாரங்களில் சிலர் வசிக்கின்றனர். தங்களுக்கு வாழ்க்கையை ஆரம்பிக்கக் கூடிய உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லையென அவர்கள் கூறுகின்றனர்.
எமக்கு வீடுகளைக் கட்டித் தருவதாக அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால், அவர்கள் இன்னும் ஒன்றும் செய்யவில்லை என்று ஏ என்னிடம் கூறினார்.
அந்தப் பகுதியில் 650,000 ரூபா செலவில் வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவித்தன. ஆனால், 325,000 ரூபாயே கிடைக்கக்கூடியதாக உள்ளது.
தற்காலிக வீடுகளை அமைக்கும் நோக்கமானது தமிழ் மக்களின் துன்பத்தை மேலும் நீடிப்பதாக அமையுமென்று முன்னணி தமிழ்த் தலைவர் ஒருவர் கூறினார்.
அரசாங்கத்தால் சேவையை வழங்க முடியாதிருந்தால் அரசசார்பற்ற முகவரமைப்புகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். ஆனால், அரசு அதனைச் செய்வதில்லை. அவர்கள் காணிகளை சுவீகரிக்கின்றனர். மீள்குடியேற்றத் திட்டம் என்று கூறப்படுபவற்றை குடியேற்றத் திட்டங்களை அமுல்படுத்தும் தன்மையுடன் மேற்கொள்கின்றனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அரிப்புக்குச் சமீபமாக முஸ்லிம்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். இதனை "கச்சால்%27 என்று உள்ளூர் தமிழர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். தமது பகுதியில் அமைதிக்கு இடையூறு என்பதே கச்சால் என்பதன் அர்த்தமாகும். அப்பகுதிகளில் தமிழர்களுக்கு முன்பாக இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீளக்குடியேற்றப்பட்டிருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
திருக்கேதீஸ்வரத்தில் சிங்களவர்கள் நிர்மாணப் பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டுள்ளனர். வீதிகளைத் திருத்துவதுடன், அழிந்துபோன கோவில் கட்டமைப்புகளை புனர்நிர்மாணம் செய்கின்றனர். அதற்கு சமீபமாக உள்ள மகாதித்த விகாரையில் பிரகாசிக்கும் வர்ணங்கள் முன்னர் புலிகளின் வலிமையான கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் பௌத்த ஆலயங்கள் மீள் எழுச்சி பெறுவதற்கு அடையாளமாக விளங்குகின்றன.
மகாதித்த விகாரையில் இரு பௌத்த பிக்குகள் வசிக்கின்றனர். ஹெலஉறுமயவின் முன்னாள் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் மகாதித்த விகாரையின் வரலாற்று ரீதியான இருப்பை உறுதிப்படுத்தியிருப்பதாக பாதுகாப்புச் சேவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தமது நிலத்தில் நாங்கள் ஆலயத்தைக் கட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு கூறுவதற்கு திருக்கேதீஸ்வர ஆலயம் இப்போது சவாலாக உள்ளது என்று அக்கோவிலில் நிலைகொண்டிருக்கும் இராணுவ உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
வீதிகள் தோறும் பௌத்த வழிபாட்டு நடவடிக்கைகளைக் காணக்கூடியதாக இருந்தது. வீதிகள் சிங்கள பெயர்களைக் கொண்டவையாகக் காணப்பட்டன. விடத்தல் தீவில் காமினி குலரட்ண ஹசலக வீரயா என்று வீதிக்குப் பெயரிடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அப்பகுதியிலுள்ள உள்ளூர்வாசிகள் தமிழர்கள் ஆகும். வீதியின் பெயர் மட்டுமே சிங்களத்தில் இருந்தது. பாதுகாப்பிற்காக இராணுவமும் கடற்படையும் காணிகளை முடக்கி வைத்துள்ளன. அவர்கள் எமது கலாசாரம் பாரம்பரியத்தை இப்பகுதியிலிருந்து துடைத்தெறிய முயற்சிக்கின்றனர் என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒருவர் எனக்குத் தெரிவித்தார்.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட தமிழர்களின் துன்பம் மேலும் அதிகரித்த நிலைமையே காணப்படுகிறது. உள்ளூர்வாசிகள் யாவற்றையும் தொலைத்துவிட்டவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களிடம் சக்தியில்லை. அரசியல் அமைப்போ அல்லது சிவில் இயக்கங்களோ வலிமையாக இல்லை.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் மக்களுக்கு இல்லை. ஆதலால் அவர்கள் அரசியலைப் பற்றி கவலைப் பட முடியாது என்று அப்பகுதியைச் சேர்ந்த மத குரு ஒருவர் கூறினார்.
கொழும்பு நிர்வாகம் விரும்புவதை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் தமிழர்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், இந்த நிலைமையால் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடின்மை வலிமையானதாக ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. அதாவது சமாதான எதிர்பார்ப்புகளை தாமதப்படுத்தினால் மக்கள் மத்தியில் இருந்து எதிர்மறையான கருத்துகள் தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
அரசாங்கம் வீதிகளைப் புனரமைக்கிறது. உள்சார் கட்டமைப்பை அபிவிருத்தி செய்கிறது. தெற்குடன் இணைக்கும் வீதிகள், பாலங்களை நிர்மாணித்துவருகிறது.
ஒவ்வொரு 500 மீற்றர் தூரத்திற்குமிடையில் பதுங்கு குழிகள் காணப்படுகின்றன. தொடர்ந்து காணப்படும் இராணுவ பிரசன்னமானது சமூகங்களை இணைக்கும் பாலம் இல்லாமல் இராணுவ நிர்வாகமாகக் காணப்படும் தன்மையைக் கொடுக்கிறது.
-Thinakkural -
|