|
தமிழ் கட்சிகள் - இடதுசாரிகள் கூட்டு எதுவரை?
-கலியுகன்
இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் ஜனநாயக கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டாகப் போட்டியிடுவதாகஅறிவித்துள்ளனர். தமிழ் கட்சிகளில் தமிழ் தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் உருவாகியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட்ஈ.பி.ஆர்.எல்.எப் (வரதர் அணி) என்பனவும் இடதுசாரிக் கட்சிகளில் இலங்கைகம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பனவும் இக்கூட்டில் அடங்குகின்றன. இவ்விரு பகுதியினரதும் இந்த முடிவு இலங்கையின் முற்போக்கு-ஜனநாயக சக்திகளுக்கு என்றென்றைக்கும் மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தக் கூட்டுக்கு வெளியே உள்ள சூழல் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியமானது. பிரிவினைவாத தமிழ் ஈழக் கோரிக்கையையும் அதற்கான ஆயுதப் போராட்டத்தையும் கைவிட்டு, புலிகளின் பாசிசப் போக்கிற்குஎதிராக போராடி வரும் மேலும் இரு தமிழ் கட்சிகள் (அவைகள் ஒப்பீட்டு வகையில் ஏனைய தமிழ் கட்சிகளை விட பலமானவையும் கூட) எம்மத்தியில் இருக்கின்றன. அக்கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற போதிலும், அரசாங்க அணியில் போட்டியிடாது தனியாகப் போட்டியிடுகின்றது. ஏனைய கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசாங்க அணியுடன் இணைந்து போட்டியிடுகின்றனர். இவ்விரு கட்சியினரையும் உள்ளடக்கி தமிழ் ஜனநாயக கட்சிகள் ஒரு கூட்டணியாகப் போட்டியிட்டிருந்தால் கிழக்கு மாகாணசபையில் தமிழரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவாய்ப்பாக அமைந்திருக்கும். மறுபக்கத்தில் மூன்று தமிழ் கட்சிகளுடன் (தமிழ் தேசிய ஜனநாயக முன்னணி) இணைந்து போட்டியிடுகின்ற இடதுசாரிக கட்சிகள்; இரண்டையும் பொறுத்த வரையில் அவர்கள் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்தில் இருந்து கொண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்க அணியில் போட்டியிடாது தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து ஏன் போட்டியிடுகின்றனர் என்று தெரியவில்லை. பத்திரிகைச் செய்தியொன்றின்படி அரசாங்கத்திலுள்ள இனவாதிகளுக்கும் கிழக்கிலுள்ள தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே இடதுசாரிகள் தமிழ் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்துபோட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. அச்செய்தி உண்மையானால் அவர்கள் முதலில் தென்னிலங்கையில் இனவாதிகளுடன் போர் புரிய வேண்டும். அரசாங்கத்தின் பல இனவாத நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறவும் தயாராக வேண்டும்.
கிழக்கிலுள்ள தமிழ் ஆயுதக்குழுக்களென எல்லோரும் குறிப்பிடுவது முன்னர் கருணா குழுவாக இருந்து இப்போது பிள்ளையான் குழுவாக மாறியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையே. கிழக்கிலிருந்து வன்னியை தலைமையாகக் கொண்ட புலிகள் விரட்டப்பட்டாலும் அவர்களது ஊடுருவல் கிழக்கில் இன்னமும் கணிசமாக இருக்கின்றது. அதனால் கூடுதலாகப் பாதிக்கப்படக்கூடிய பிள்ளையான் குழுவினர் ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஆயுதம் வைத்திருக்க வேண்டிய தேவையை கள நிலவரமும் அரசியலும் விளங்கிய அனைவரும் ஏற்றுக்கொள்வர். அத்துடன்இடதுசாரிகள் இன்று கூட்டு வைத்திருக்கும் தமிழ் கட்சிகளில் இரண்டு முன்னர் ஆயுதம் தரித்திருந்தவைதான் (2002 ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் ரணில் அரசாங்கம் ஆயுதங்களைக் களையும் வரை)என்பதையும் இடதுசாரிகள் மறந்துவிடக் கூடாது. அதேவேளையில் இத்தேர்தல் கூட்டிலுள்ள தமிழ் கட்சிகளுக்கு கிழக்கு மாகாணத்தில் ஓரளவு செல்வாக்கு இருப்பது உண்மையே என்ற போதிலும், இடதுசாரிக்கட்சிகளுக்கு அங்கு எவ்வளவு தூரம் செல்வாக்கு இருக்கின்றது என்பது கேள்விக்குறியே. முன்பொரு காலத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களிலும் கல்முனை சம்மாந்துறை பிரதேசங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு- குறிப்பாக சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு- கணிசமான செல்வாக்கு இருந்த போதிலும் இப்பொழுது அந்த செல்வாக்கு எதுவும் இல்லை. எது எப்படியிருப்பினும் தமிழ் கட்சிகள் - இடதுசாரிகள்கூட்டு அமைந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய முன்னேற்றகரமான அம்சமே. தமிழ் மக்களின் பிரதான கட்சிகளான தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கடசி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும் அவற்றின் வழித்தோன்றலான விடுதலைப்புலிகளும் இலங்கையின் வரலாற்றில் எந்தக் காலத்திலும் இடதுசாரிகளுடன் கூட்டுச்சேர்ந்தது கிடையாது. அது மாத்திரமல்ல மேற்குறிப்பிட்ட இந்தக்கட்சிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் கூட்டு வைத்தது கிடையாது. சாதிவெறியும் மேட்டுக்குடி மனப்பான்மையும் ஏகாதிபத்திய சார்பும் கொண்ட தமிழ் பிற்போக்கு சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்திய இக்கட்சிகள், தமது வர்க்க சகாவான ஜக்கிய தேசியக் கட்சியுடனேயே எப்பொழுதும்; - இன்றுவரை - நட்பு பூண்டு வந்துள்ளன. அந்த வகையில் இப்போது ஏற்பட்டுள்ள தமிழ் கட்சிகள் - இடதுசாரிகள் கூட்டு இலங்கை வரலாற்றின் ஒரு திருப்புமுனை என்றுதான் சொல்ல வேண்டும். அதேவேளையில் இந்தக்கூட்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலுடன் முடிந்துவிடுமா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் தமிழ் ஜனநாயகக் கட்சிகளும் இடதுசாரிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய ஒரு தேவை. இலங்கை அரசியலைப் பொறுத்தவரை நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. இடதுசாரிகள் தமிழ்மக்களின் நியாயபூர்வமான ஜனநாயகக் கோரிக்கைகளை ஏற்பதன் மூலமும், தமிழ் ஜனநாயகக்கட்சிகள் இலங்கை மக்கள் எதிர்நோக்குகின்ற பொதுப்பிரச்சினைகளில் ஒன்றிணைந்து போராடுவதின் மூலமும் தான் இலங்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இந்த ஒற்றுமைக்கான முயற்சியை இலங்கையின் இடதுசாரிகள் எப்பொழுதோ முன் கையெடுத்துச் செய்திருக்கவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் இடதுசாரிக்கட்சிகள் இன்றிருக்கும் நிலையையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.
உண்மையான நிலையை எடுத்துப் பார்த்தால் கம்யூனிஸ்ட் - சமசமாஜக் கடசிகளுக்கு முன்னைய காலங்களில் இருந்ததைப் போல தொழிலாளி வர்க்கம் மத்தியிலோ இலங்கையின் அடிமட்ட மக்கள் மத்தியிலோ இப்பொழுது செல்வாக்கு இல்லை. அவர்கள் ஒரு பத்திரிகை வெளியிடுவது கூடஇல்லை. முன்னைய காலங்களில் செய்து வந்தது போன்று அரசியல் வகுப்புகள், அரசியல் கருத்தரங்குகள், தொழிற்சங்கப் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், வீதிப்பிரச்சாரங்கள், பத்திரிகை விநியோகம், நிதி சேகரிப்பு எதுவுமே செய்வதில்லை. அவர்களிடம் இளம் சந்ததி கிடையாது. பழைய முதிர்ந்த தலைவர்களே கட்சியை இன்னமும் கொண்டு நடத்துகின்றனர். அவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்பு விடுபட்ட நிலையே காணப்படுகின்றது. வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ் - முஸ்லிம் மக்களிடையே எவ்வித கட்சி அமைப்பும் கிடையாது. (புலிகளின் ஜனநாயக மறுப்பும் பாசிசப் போக்கும் இதற்கு ஒரு காரணமாகும்) தென்னிலங்கையில் இடதுசாரிகளுக்கு முன்பு இருந்த ஆதரவுத்தளத்தை போலி இடதுசாரிகளான ஜே.வி.பி யினர்இப்பொழுது கைப்பற்றி வைத்துள்ளனர். எனவே இடதுசாரிக்கட்சிகள் தமிழ் ஜனநாயகக் கட்சிகளுடன் உறவை ஏற்படுத்துகின்ற அதேவேளையில், நாடு தழுவிய ரீதியில் - குறிப்பாக தென்னிலங்கையிலுள்ள சிங்களமக்கள் மத்தியில் அரசியல் வேலைகளை தீவிரமாக முன்னெடுப்பது அவசியமாகும். அதேவேளையில் இடதுசாரிகள் - தமிழ்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இடது - ஜனநாயக சக்திகளின் கூட்டணிக்கு, நீண்டகால அடிப்படையிலான ஒரு பொது வேலைத்திட்டத்தை வகுத்து, அதன் அடிப்படையில் செயற்படுவது அவசியம். அப்படியல்லாது வெறுமனே தேர்தல் கூட்டணியுடன் மாத்திரம் கலைந்து போவதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. இலங்கையில் காலத்துக்குக் காலம் உருவான எத்தனையோ தேர்தல் கூட்டணிகளைப் பார்த்து ஏமாற்றமடைந்த மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதானால் இலங்கையின் இடதுசாரிகள் - ஜனநாயக சக்திகள் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.
|