|
தமிழர் போராட்டம்: தவறுகள் தந்திரோபாயத்தால் மட்டும்தானா?
எஸ். மனோரஞ்சன்
தம்பி இந்தத் தனிநாட்டுப் போராட்டமே பிழை. தமிழர் உரிமை என்ற இந்த கோசத்தின் பின்னாலேயே தமிழ் சமூகத்தை அழிக்கும் ஆணிவேரும் இருக்கு. இந்த போலித் தமிழ் தேசியம் வளர்த்துவிட்ட மிருகம் எல்லாரையும் கடித்துக் குதற, கடைசியில் சிங்கள தேசியம் இதை சிம்பிளாய் நசுக்கிப்போட்டு போகும். நீர் வேணுமென்டால் இருந்து பாரும்.”
கடந்த மார்ச் மாதம் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர் குழுவில் நானும் அங்கம் வகித்திருந்தேன். கட்டுநாயக்கா விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தது முதல் மவுன்ட் லெவனியா ஹோட்டல் விடுதிவரை எங்கு பார்த்தாலும் முப்படையினருக்கும் படைத் தளபதிகளுக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் வைக்கப்பட்ட கட் அவுட்டுக்களும், அலங்கார வளைவுகளும் சுவரொட்டிகளுமே நிறைந்து கிடந்தன.
புலிகளை முற்றாக வெல்லும் யத்தத்தை செய்ய சிங்கள மக்களை எப்படி அரசாங்கம் அணிதிரட்டுகின்றது என்பதை புரிந்துகொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. அங்கு தங்கியிருந்த ஏழு நாட்களில் இலங்கையின் பிரதான ஒலி, ஒளி மற்றும் அச்சு ஊடகங்களை பார்த்த எனக்கு இந்த உண்மை மேலும் தௌ;ளெனப் புரிந்தது. 1992ம் ஆண்டுவரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அவர்களின் யுத்த பேரிகைகளையும் பிரச்சாரங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இலங்கை அரசை வெற்றிகொள்ள புலிகள் அங்கு செய்தது சரியென்றால் புலிகளை வெற்றிகொள்ள இங்கு அரசாங்கம் தற்போது செய்வதும் சரியென்றே எனக்குப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த பெருமெடுப்பிலான யுத்த பேரிகையும் பிரச்சாரமும் புலி ஆதரவாளர்களிடையே மட்டுமன்றி புலி எதிர்ப்பாளர்களிடமும் ஒருவித பீதியை கிளப்பிவிட்டிருந்ததை உணர முடிந்தது. கொழும்பில் என்னைச் சந்தித்த புலிகளுக்கு எதிரான தமிழ் இயக்கமும் கட்சியுமான ஒரு அமைப்பின் தலைவர் என்னிடம் இப்படிக் கூறினார். “இந்த யுத்த பேரிகைகளைப் பார்க்க எங்களுக்கே பயமாக இருக்கு. இது எங்கே கொண்டுபோய் விடப்போகிறதோ தெரியவில்லை. சந்திரிக்கா அரசாங்கத்திலோ ஏன் பிரேமதாச காலத்தில்கூட யுத்தம் நடந்த போது இப்படியான உணர்வு எமக்கு வரவில்லை” என்றார்.
அவரிடம் நான் இப்படியொரு கேள்வியை திருப்பிக் கேட்டேன். “மகிந்த இப்படிச் செய்யாவிட்டால் இந்த அரசாங்கத்தால் புலிகளை வெல்ல முடியுமா? சிங்கள மக்கள் துணிந்து யுத்தத்திற்கு போவர்களா?” அதற்கு அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் “அது உண்மை. இப்படியில்லாமல் இந்த சண்டையை செய்யவும் முடியாது.” என ஏற்றுக்கொண்டார். நான் இவ்வாறு கேட்டதற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. புலிகளுக்கு எதிராக ‘சமாதானத்துக்கான யுத்தம்’ என்னும் தோல்விகரமான யுத்தத்தை செய்த சந்திரிக்காவின் அரசாங்கத்தில் நானும் ஒரு முக்கிய அதிகாரியாக பணியாற்றியிருந்தேன்.
1995இல் புலிகள் வலிந்து தாக்கி ஆரம்பித்த யுத்தத்தை ஒரு பக்கம் நடத்திய சந்திரிகா அரசு மறுபக்கம் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான திட்டமொன்றை முன்வைத்து நாடு முழுதும் பிரச்சாரமும் செய்தது. அரசாங்க ஊடகங்களில் மிக பொறுப்பான பதவிகளில் இருந்த நான் சிங்கள மக்களிடையே அரசியல் தீர்வின் அவசியம் பற்றியும் யுத்தத்தால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட முடியாதது என்னும் கருத்தையும் அரச ஊடகங்களின் மூலம் பிரச்சாரப்படுத்துவதில் முக்கிய பாத்திரம் வகித்தேன்.
இக்காலத்தில் புலிகள் பல முக்கிய இராணுவ வெற்றிகளை குவித்தனர். அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் அரசியல் தீர்வு பற்றி பேசுவதை விடுத்து சிந்திக்கக்கூட இடமிருக்கவில்லை. இலங்கை அரச இராணுவத்தினருக்கு உடனடியாக 15,000 பேரைச் சேர்ப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அப்போது முடிவெடுத்தது. ஆனால் அவர்களால் 3000 பேரைக்கூட சேர்க்க முடியவில்லை.
அப்போது இலங்கையின் முப்படைகளின் தளபதிகள் குறிப்பாக இராணுவத் தளபதி ஜனாதிபதி சந்திரிகாவின் முன்னிலையிலேயே அரசாங்க ஊடகங்களை குற்றம் சாட்டினர். “அரசாங்க ஊடகங்களே ‘யுத்தத்தால் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. சமாதானத் தீர்வுதான் ஒரே வழி என பிரச்சாரம் செய்தால் படைக்கு இளைஞர்கள் எப்படி வருவார்கள்” என கேள்வியெழுப்பினர். அத்தளபதி நேரடியாக என்னை பெயர் சொல்லியழைத்து ‘தயவு செய்து சில மாதங்களுக்காவது இந்த சமாதானம், அரசியல் தீர்வு பற்றிய நிகழ்ச்சிகளை ஒலி, ஒளி பரப்பாதிருக்குமாறு கூறினார்.
ஆனால் ஜனாதிபதி சந்திரிகா அதனை ஏற்றுக்கொள்வில்லை. நாங்கள் தொடர்ந்தும் சமாதானத்துக்கான நிகழ்ச்சிகளை நடத்தினோம். இளைஞர்கள் படையில் சேரவேண்டும் என இராணுவத்தினரின் விளம்பரங்கள் மட்டுமே பிரச்சாரப்படுத்தப்பட்டன. முன்னர் புலிகளுக்கு எதிராக ‘தராக்கி’ என்னும் புனைபெயரில் எழுதி பின்னர் புலிகளுக்கு ஆதரவாக மாறிய த.சிவராம் ஒரு முறை என்னிடம் இப்படிக் கூறினார். ‘சிங்கள ஆமிக்காரன் ஒழுங்காத்தான் அடிச்சுக்கொண்டிருந்தான். நீங்களும் உங்கட சந்திரிக்கா அரசாங்கமும் ஒரே சாமய…சாமய (சமாதானம்…சமாதானம்) என்று கத்தப்போய் சிங்களவனுக்கு இருந்த உசாரையும் இல்லாமல் ஆக்கிப் போட்டீங்கள்’ என்றார்.
கடந்தகால தவறுகளில் இருந்து இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல ஒட்டுமொத்த அரச இயந்திரமுமே கற்றுக்கொண்டது. அதனால்தான் இம்முறை அது தன் பெரும் திட்டத்தை வகுத்தது. 2006ல் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டம் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தது. ஒரு ஒட்டு மொத்த திட்டத்தை வரைந்து புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக முடிவுகட்ட அது தீர்மானித்தது. அந்த நடவடிக்கைக்கு எதிராக எது, எவர் வந்தாலும் அவற்றை தகர்த்துக்கொண்டு முன்னேறுவது என்பது அரசாங்கத்தின் முடிந்த முடிவாகியது. இரண்டு வருடங்கள் பத்து மாதங்களில் அது தன் முயற்சியில் வெற்றியும் கண்டது. புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். ‘தமிழ் சமூகத்தின் தனிநாட்டுக்கான போராட்டம்’ முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
தோற்கடிக்கப்பட்டது புலிகள்தான், தமிழ் மக்கள் அல்ல, என்று வாதிடுவோரும் உளர். ஆனால் புலிகளின் அரசியலைத் தவிர வேறெதுவும் தமிழ் மக்ளின் அரசியலாக இல்லாது ஆக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளுடன் சேர்த்து தமிழ் மக்களும் தோற்கடிக்கப் பட்டுவிட்டனர் என்றே கருத வேண்டும். மக்கள் எக்காலமும் தோற்கடிக்கப்பட மாட்டார்கள் என்று வாதத்தை நாம் நமது திருப்திக்காக வேண்டுமானால் வைத்துக்கொள்லாம்.
புலிகள் இயக்கம் தமிழ் சமூகத்துக்குள் வளர்ந்ததே தமிழ் மக்களின் தோல்விதான். அது வெற்றிகண்டு இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தோல்விதான். இன்று அது மற்றெல்லா சக்திகளையும் அழித்து தானும் அழிந்து போனதும் தமிழருக்குத் தோல்விதான். அதனால்தான் தமிழ் சமூகம் பாரியதொரு வெற்றிடத்தை உணருகிறது. இந்த மிகக் கசப்பான உண்மையை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
புலிகள் விட்ட தந்திரோபாயத் தவறுகளினால்தான் அரசாங்கத்திற்கு இந்த வெற்றி கிடைத்தது என்று புலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலி எதிர்ப்பாளர்களும் இப்போது வெளிப்படையாக பேசத் தொடங்கியிருக்கிறார்கள். புலி எதிர்ப்பாளர்களின் இந்த அங்கலாய்ப்பிற்கு காரணமே புலிகளுடன் சேர்த்து தமிழ் மக்களும் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்னும் வெளியே சொல்ல முடியாத உண்மைதான்.
புலிகள் எங்கெங்கெல்லாம் தவறு விட்டார்கள் என்பது பற்றி பல ஆய்வுகளும் வியாக்கியானங்களும் பல தரப்புகளில் இருந்தும் பலரால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முன்வைக்கப்படுகின்றன. அநேகமான வியாக்கியானங்களில் புலிகள் தந்திரோபாய ரீதியாக தவறு விட்டுவிட்டதாகவே பிரஸ்தாபிக்கப்படுகின்றது.
‘புலிகள் கொஞ்சமாவது மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருந்தால் அவர்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்றும் சங்கடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
முன்னர் புலிகளோடு நெருக்கமாக இருந்து பின்னர் வெளியேறி தற்போது புலி எதிர்ப்பாளர்களாக மாறியிருக்கும் சிலர்,
‘புலிகள் மற்றெல்லாத் தவறுகளை விட்டிருந்தாலும் கருணாவோடு ஒரு சமரசத்திற்கு வந்திருக்கலாம். அப்படியிருந்தால் அவர்கள் தோற்றிருக்க மாட்டார்கள்’ எனத் தற்போது அங்கலாய்க்கின்றனர்.
அத்துடன் கூடவே… புலிகள் மற்றைய இயக்கங்களை அழித்ததுதான் தவறு.
புலிகள் இந்தியாவோடு முரண்பட்டதுதான் அவர்கள் விட்ட மாபெரும் தவறு.
புலிகள் மகிந்தவை அதிகாரத்துக்கு கொண்டு வந்ததுதான் மிகப் பெரும் தவறு. போன்ற அங்கலாய்ப்புக்களையும் நாம் கேட்கின்றோம். இந்த அங்கலாய்ப்புக்களுள் எல்லாம் மூன்று வகைத் தொனிகளை நாம் அவதானிக்கலாம்.
முதலாவது, புலிகளின் அரசியலை முழுமையாக நம்பி அதனை ஆதரித்து அதன் மீதே தமது சகலதையும் முதலீடு செய்த ஒரு பிரிவினரின் அங்கலாய்ப்பு. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் எதிர்காலமே இன்று கேள்விக்குறியாக ஆக்கப்பட்டுள்ளது. புலிகள் எந்த அநியாயங்களைச் செய்தாவது தனியரசை அமைத்தே தீருவார்கள் என நம்பியவர்கள் இவர்கள்.
இரண்டாவது, புலிகளின் அரசியலை ஏற்காதவர்கள். புலிக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள். ஆனாலும் புலிகளின் கடுமையான இராணுவப் போக்கின் காரணமாக அரசாங்கத்திடம் தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பேரம் பேசலாம் என நம்பியிருந்த பிரிவினரின் மனப் பிரலாபம். புலிகள் தனியரசமைப்பது பொய். ஆனால் அதற்கு குறைந்த எதையாவது அரசாங்கம் தருவதற்கு ‘புலிகளின் அடி’ உதவும் என நம்பிக்கையோடு இருந்தவர்கள் இவர்கள்.
மூன்றவது, புலிகளின் அரசியலையும் ஏற்காதவர்கள். புலி எதிர்பாளர்களின் அரசியலையும் ஆதரிக்காதவர்கள். அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்தவர்கள். ஆனாலும் தற்போது புலிகள் அழிந்து போனதால் தமிழருக்கு அரசாங்கம் ஏதும் தரப்போவதில்லை என ஒரு வினோதமான அங்கலாய்ப்பு இவர்களது. இவர்கள் சர்வதேச சமூகத்தை அதிகமாக நம்பியவர்கள். ஆனால் சர்வதேச சக்திகளின் டiஅவையவழைளெ என்ன என்பதையும் நன்கு அறிந்தவர்கள் என்றும் கூறலாம்.
மேற்சொன்ன மூன்று பிரிவினரிடையேயும் இருந்த ஒருவித பொதுப்படையான எண்ணத்தை கடந்த காலத்தில் நாம் அவதானிக்கலாம். அதாவது ‘தமிழ் மக்களுக்கு அரசாங்கம் தீர்வொன்றை முன்வைக்காமல் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க முடியாது என்பதுதான்’. புலிகளை தமிழ் மக்கள்தான் தோற்கடிக்க முடியும், அது சிங்கள அரசாங்கங்களால் முடியாது என்னும் கருத்துக்களும் பிரஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் இந்த இரண்டுமே பொய்த்துப் போய்விட்டதை நாம் காண்கின்றோம்.
தற்போது தென்னிலங்கையில், உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு யாப்பியல் ரீதியான தீர்வொன்று கொடுக்கப்பட வேண்டும் என நேர்மையாக நம்புகின்ற சில சிங்கள அரசியல்வாதிகளும், சமூக அக்கறையாளர்களும் மட்டுமே “அரசியல் தீர்வொன்று கொடுக்கப்படாவிட்டால் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகுவான்” எனக் கூறுகின்றனர். 30 வருடம் போராடிய தமிழ் சமூகத்தின் எந்தப் பிரிவினரிடமி;ருந்தோ அல்லது புலிகள் இயக்கத்தின் மீதமுள்ள பிரிவினரிடமிருந்தோ, அதனை ஆதரித்தவர்களிடமிருந்தோ அப்படியான கருத்து எதைனையும் நாம் காணமுடியவில்லை.
சொந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசும்போது சில விடயங்களைச் சொன்னார். தனது ஊரைச் சேர்ந்த ஒரு முதிர்ந்த இடதுசாரி செயற்பாட்டாளர் 20 வருடங்களுக்கு முன்னர் தன்னிடம் இப்படிக் கூறினாராம்.
“தம்பி இந்தத் தனிநாட்டுப் போராட்டமே பிழை. தமிழர் உரிமை என்ற இந்த கோசத்தின் பின்னாலேயே தமிழ் சமூகத்தை அழிக்கும் ஆணிவேரும் இருக்கு. இந்த போலித் தமிழ் தேசியம் வளர்த்துவிட்ட மிருகம் எல்லாரையும் கடித்துக் குதற, கடைசியில் சிங்கள தேசியம் இதை சிம்பிளாய் நசுக்கிப்போட்டு போகும். நீர் வேணுமென்டால் இருந்து பாரும்.”
அந்த தீர்க்கதரிசனமான வார்த்தைகளை முன்னாள் போராளியான இந்த நண்பர் பெருமையுடன் நினைவுகூர்ந்தார். இதனைக் கூறிய அந்த இடதுசாரி செயற்பாட்டாளர் வயது முதிர்ந்து வாடி, அத்தனை கொடிய யுத்த சூழ்நிலைகளுக்கும் முகம் கொடுத்து தற்போது வவுனியா முகாமொன்றில் இருக்கிறார் என்னும் தகவலையும் கூறினார்.
தவறை தவறென்று ஏற்றுகொண்டு அதனை அந்த இடத்திலேயே திருத்த வேண்டும். அதைவிடுத்து ‘சரி சரி தவறு விட்டாயிற்று இனி அதைப் பற்றிக் கதைக்காமல் அந்த தவறான வழியிலேயே போனால் வெற்றி வரும்’ என சொல்பவன் சொன்னால் கேட்பவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று.
சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொன்னால், இலங்கைத் தமிழ் சமூகத்தில் சமூக, அரசியல், கலையிலக்கியம் அனைத்திலும் ஆதிக்கத்தை வைத்திருந்தது மிகப் பிற்போக்குத் தனங்களும் மானுட நாகரீக விரோதப்போக்குகளுமே. அந்தப் போக்குகளின் உச்சமாக ஆரம்பித்த போராட்டம் வெறும் தந்திரோபாயத் தவறுகளை மாத்திரம் விடாதிருந்தால் வெற்றி பெறும் என கனவில் கிடந்த எம்மை சிங்களத் தேசியம் பிடரியில் அடிபோட்டு எழுப்பியிருக்கிறது அவ்வளவுதான்.
உதயம் அவுஸ்திரேலியா
|