|
கனடிய ஜனநாயக தமிழ் கலாசார மன்றம் நடாத்தும் ‘மாபெரும் இசை நிகழ்சி’
இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களிலேயே தமிழ் - சிங்கள மக்களுக்கிடையே புரிந்துணர்வு, சகவாழ்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் தமிழ் - சிங்களப் புத்தாண்டை கனடிய ஜனநாயக தமிழ் கலாசார மன்றம் நடாத்திவருகிறது. அந்தவகையில் இவ்வாண்டும் ‘மாபெரும் இசை நிழ்ச்சி’யாக கொண்டாடுகிறது. நாளை (24.04.10) மாலை 5.00 மணிக்கு, 1133 லெஷ்லி வீதியிலுள்ள (எக்லிங்ரன் ரூ லெஷ்லி) ‘கொறியன்’ கலாசார மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு தமிழ் - சிங்கள நண்பர்களை, நண்பியரை பெருந்திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். இவ்விழாவில் பரதநாட்டியம், கண்டிய நடனம், கதகளி, சீன சிங்க நடனம், ஆப்பிரிக்க டிரம் மற்றும் பல பல்கலாசார நிழ்ச்சிகளுடன் ‘நிப்புல்’ குழு வழங்கும் ‘நண்பர்கள்’ என்னும் இசை நிகழ்சியும் நடைபெறும். இவ்விழாவுக்கு கனடாவில் வாழும் அனைத்து இலங்கை மக்களையும் அன்புடன் அழைக்கின்றனர் கனடிய ஜனநாய தமிழ் கலாசார மன்றத்தினர்.
தொடர்புகளுக்கு: தொலைபேசி – (416) 588 – 3230.
____________________________________________________________________________________________
இ.தொ.கா.தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எங்கே?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப்பதவி கிடைக்குமா என்பது தொடர்ந்தும் கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. இந்தச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் வரை ஆறுமுகன் தொண்டமான் புதிய அமைச்சை பொறுப்பேற்பாரா என்ற தகவல்கள் எதுவும் தமிழ்மிரர் இணையதளத்துக்கு கிடைக்கவில்லை. இன்று காலை முதல் தமிழ்மிரர் இணையதளம் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் தொடர்புகொள்ள்வதற்கு தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. இதேவேளை,பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்துடன் காலையிலிருந்து தமிழ்மிரர் இணையதளம் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சி சற்று முன்னர் கைகூடியது. முத்து சிவலிங்கம் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப்பதவிகள் எதையும் பொறுப்பெடுக்கவில்லை என பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார். (மேலும்) 24.04.10
____________________________________________________________________________________________
ரணில் ஒரு பச்சைத் துரோகி : பிரபா கணேசன் எம்பி
ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சை துரோகமாகும்.நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய எமது தலைவர் மனோ கணேசனின் குரலை ஒலிக்கவிடாமல் செய்துவிட்ட ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு பதில் கூறியே ஆகவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். தமது கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைதொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கருத்து தெரிவித்த பிரபா கணேசன் மேலும் கூறியதாவது:"எமது கட்சி ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியின் ஸ்தாபக கட்சியாகும். நான்கு ஸ்தாபக கட்சிகளுக்கும் தேசியப்பட்டியலில் குறைந்தபட்சம் ஒரு உறுப்புரிமை இருக்கின்றது என்ற அடிப்படையிலேயே ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. மேலதிகமான தேசியப்பட்டியல் நியமனங்கள் அவ்வவ் கட்சிகள் சார்பில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களின் தொகைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படவேண்டும். (மேலும்) 24.04.10
____________________________________________________________________________________________
ரணில் இருக்கும்வரை ஐதேமுவுடன் தொடர்பில்லை : மனோ கணேசன்
ஐக்கிய தேசிய முன்னணியில் ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை தாம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் எது வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து தாம் முற்றாக விலகியுள்ளதுடன், இனி வரும் காலங்களில் தொடர்ந்து தனித்து செயற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மலை 5.00 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற இருக்கும் மத்திய குழு கூட்டத்தின் போது, இவ்விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, மனோ கணேசனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே எமது இணையத் தளத்திடம் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
____________________________________________________________________________________________
வடக்கு ரயில் பாதை அமைப்புப் பணிகளில் இந்தியப் பொறியியலாளர்கள்
வவுனியா மற்றும் மதவாச்சி பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள இந்திய பொறியியலாளர்கள் குழு ஒன்று வடபகுதிக்கான ரயில் பாதையை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதையின் நிர்மாணப் பணிகளை இந்திய நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதை அமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரை எஞ்சியுள்ள மூன்று மைல் தூரம் கொண்ட ரயில் பாதையை அமைக்க சுமார் மூன்று மாத காலம் எடுக்கும் என ரயில்வே திணக்களம் எதிர்பார்க்கின்றது.
____________________________________________________________________________________________
இலங்கை திரைப்பட விழாவில் பங்கேற்க ரஜனிகாந்த்,கமல்ஹாசன் மறுப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்பதற்கு ரஜனிகாந்த்,கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்கள் மறுப்புத்தெரிவித்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தித்திரைப்பட சுப்பர் ஸ்டார் அமிதாபச்சன் இந்த அழைப்பினை விடுத்திருந்தார். இதேவேளை,அபிஷேக் பச்சான்,ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இத்திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________________________________
இலங்கையின் புதிய அமைச்சரவை: புதிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை வெள்ளியன்று பதவி ஏற்றுள்ளது. அமைச்சரவை அந்தஸ்த்தை கொண்ட அமைச்சர்களாக 37 பேரும், துணை அமைச்சர்களாக 39 பேரும் பதவியேற்றுள்ளனர். முன்னைய அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்த்தைக் கொண்ட 51 அமைச்சர்களும், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத 39 அமைச்சர்களும் மற்றும் 19 துணை அமைச்சர்களும் அதில் இடம்பெற்றிருந்தனர். ஆகவே தற்போதைய அமைச்சரவை ஒப்பீட்டளவில் சிறியது என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. புதிய அமைச்சரவையில், பாதுகாப்பு, நிதி மற்றும் திட்டமிடல், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ஆகிய துறைகள் ஜனாதிபதியின் வசம் இருக்கின்றன. பிரதமர் டி.எம்.ஜயரட்ண பௌத்த சாசன மற்றும் மதவிவகார அமைச்சராகவும் செயற்படுவார். வெளியுறவு அமைச்சராக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சராக மைத்த்ரிபால சிரிசேனவும், அனர்த்த நிவாரண அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மீள் குடியேற்றத்துக்கான அமைச்சராக மில்றோய் பெர்ணாண்டோவும், இத்துறையின் துணை அமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். முன்னர் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சராக செயற்பட்டுவந்த முரளிதரன், தற்போது துணை அமைச்சராக்கப்பட்டுள்ளார். (மேலும்) 23.04.10
____________________________________________________________________________________________
கிளிநொச்சி ரயில் பாதையோரங்களில் கடைகள் அமைக்கத் தடை
கிளிநொச்சி ரயில் பாதையின் இருமருங்கிலும் கடைகள், வியாபார ஸ்தபானங்களை அமைக்க வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது. கிளிநெச்சியில் தற்போது மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கிளிநெச்சி ரயில் பாதையில் வடக்கு – தெற்கு பக்கமாக இருமருங்கிலும் தற்போது வியாபார ஸ்தபானங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால், இவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கும் கடைகள், வியாபார ஸ்தாபனங்களால் இடையூறு ஏற்படலாம் என்பதால் இவ்வாறான அறிவுறுத்தல் ஒன்றினை வழங்குவதாக கரைச்சி பிரதேச சபைச் செயலாளர் வெ.குலேந்திரன் தெரிவுத்துள்ளார். அதேவேளை கிளிநொச்சி வீதியின் இருமருங்கிலும் உள்ள மரங்களை வெட்ட வேண்டாம் எனவும் கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது. கிளிநொச்சியில் தற்போது மீளக் குடியேற்றம் நடைபெற்று வருகின்றமையினால் மக்கள் தமது வீடுகளை அமைப்பதற்காக வீதிகளின் ஓரங்களிலுள்ள மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். கடந்த கால யுத்தங்களினால் கிளிநொச்சிப் பிரதேசத்தில் பெருமளவான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மரவளம் அழிந்து போவதைத் தடுக்கும் முகமாகவே இவ்வாறான அறிவித்தலை வெளியிட்டதாக கிளிநெச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.
____________________________________________________________________________________________
பகிரங்க கலந்துரையாடல் !
“பாராளுமன்ற தேர்தல் 2010 : ஒரு மீள் பார்வை” அதிதி ஆய்வாளராக சமூக ஆய்வாளரும் சமாதான செயற்பாட்டாளரும் கிழக்கு பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளருமான கலாநிதி செல்வி திருச்சந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிப்பார்
காலம் : 24.04.2010 சனி மாலை 4.30 மணி - இடம் : நாவலர் மண்டபம், நாவலர் வீதி, நல்லூர்
ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் வருக ! அழைப்பாளர்கள் - யாழ் ஆய்வறிவாளர் அணியம் -
yarlleague2009@gmail.com
____________________________________________________________________________________________
சிதம்பரத்தின் அமெரிக்க பாணி ஆக்கிரமிப்புக் கனவுகளும் நக்சல்களுக்கு இரையாக்கப்படும் அரசுப் படைகளும்
- மாயா
இன்று இந்தியாவின் முதலாளித்துவ வர்க்கத்தின் நாயகனாகவும் சாமானியர்களின் பார்வையில் கோமாளியாகவும் இருக்கும் ஒரு நபர் என்றால் அது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான். இந்தியாவை பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடமிருந்து "பாதுகாப்பானதாக்கி" தங்கள் தொழில்கள் செழித்தொங்கச் செய்வதற்காக முதலாளித்துவ ஊடகங்கள் அவருக்கு நன்றிக் கடன் செலுத்துகின்றன; உலக-பிராந்திய அரசியல் காரணங்களே பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழாததற்குப் பிரதான காரணம் என்பது வேறு கதை. ஆனால் "நாட்டின் மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறிய மாவோயிஸ்டுகள் விவகாரத்தில் சிதம்பரத்தைத் தூக்கிப் பிடிக்கும் முதலாளித்துவ ஊடகங்கள் நினைத்தால்கூட அவர் கோமாளியாகக் காட்சி தருவதைத் தடுக்க முடியவில்லை. 2013க்குள் நக்சல்களை ஒழித்துக் கட்டிவிட்டு, பழங்குடியினர் வசிக்கும் கனிம வளங்கள் நிறைந்த அடர்ந்த வனங்களை பூமிச் சுரண்டல் முதலாளித்துவவாதிகளுக்கு முழுமையாகத் தாரை வார்ப்பதற்காக நக்சல் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கு அவர் அனுப்பும் படைகள் அவருடைய சிந்தனையின் தோல்வியை ரத்தத்தால் எழுதுகின்றன. (மேலும்) 23.04.10
____________________________________________________________________________________________
இணக்கப்பாட்டு கலாசாரம் தோன்றட்டும்!
பொதுவாழ்விலோ அல்லது தனிப்பட்ட வாழ்விலோ இணக்கப்பாடென்பது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. எக்காலமும் முரண்பாடுகள் தொடருமானால் நன்மைகள் எதுவுமே ஏற்பட்டு விடப் போவதில்லை. மாறாக பின்னடைவுகளே தோன்றலாம். அரசியலைப் பொறுத்தவரை இணக்கப்பாடென்பது மிகவும் அவசியமானது. நாட்டினதும் மக்களினதும் நன்மைக்கானதே அரசியல் ஆகும். எந்தவொரு நாடும் முன்னேற்றம் பெற வேண்டு மானால் அரசியலில் இணக்கப்பாடு தேவையாகிறது. கட்சிகள், இனங்கள், மதங்கள், மொழிகள் பிரதேசங்கள் என்ற பேதங்களுக்கு அப்பால் அனைத்துத் தரப்பும் பொது இணக்கப்பாட்டுடன் செயலாற்ற முன்வரும் போது தீர்க்கப்படாத சிக்கல்கள் என்று எதுவுமே இருக்கப்போவதில்லை. அதுமாத்திரமன்றி நாடும் சொர்க்கபுரி போல ஆகி விடுமென்பதில் ஐயமில்லை. இணக்கப்பாட்டின் அவசியம் குறித்து ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டியதொரு காலகட்டத்தில் எமது நாடு தற்போது உள்ளது. நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றம் கருதி முரண் பாடுகளைக் களைந்து பொதுவான சிந்தனைக்கு வருவதே இன்றைய நிலையில் ஆரோக்கியமானது. அடுத்தடுத்து இரு தேர்தல்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஜனா திபதித் தேர்தலிலும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஐக் கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கைத் திட்டங்களை மக்கள் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். இத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென்ற உறுதியான தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர். (மேலும்) 23.04.10
____________________________________________________________________________________________
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஐ.ம.சு.கூட்டமைப்பு அண்மித்துள்ளது
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7-வது நாடாளுமன்றத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் அடங்கலாக 144 ஆசனங்களைப் பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 60 ஆசனங்களையும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சி 14ஆசனங்களையும் பெற்றுள்ளது. 7-வது நாடாளுமன்றத்திற்காக நடை பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த வெற்றியையீட்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த் தனவினால் இனிவரும் காலங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது எனக் கணிப்பிடப்பட்டு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத் தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பொதுத் தேர்தல் வெற்றியை ஆளும் கட்சி ஈட்டியுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 60.33 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 29.34 வீத வாக்குகளையும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு 5.49வீத வாக்குககளையும் இலங்கைத் தமிழரசுக்கட்சி 2.90 வீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளன. (மேலும்) 23.04.10
____________________________________________________________________________________________
யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் பொலீஸாரின் உதவியை நாடுமாறு டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கொலை,கொள்ளை,கடத்தல் சம்பவங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு பொது மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன்னர் கருத்து வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா உளவுப்பிரிவு என்று கூறிக்கொண்டு எவராவது முன்வரும் பட்சத்தில் உடனடியாக பொலீஸாருக்கு தெரியப்படுத்துவதன் அல்லது அயலில் உள்ளவர்களை உதவிக்கு அழைப்பதன் மூலம் மாற்று வழிகளைக்கையாள முடியும் என்றும் தெரிவித்தார். இதேவேளை,புதிய அமைச்சரவையில் கிடைக்கவுள்ள பொறுப்புக்கள் குறித்து தமிழ்மிரர் இணையதளம் கேள்வி எழுப்பியது. தற்போதைக்கு எதுவும் கூற முடியாது எனத்தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒன்றாக இருப்பது நல்லது என்றும் குறிப்பிட்டார்.
____________________________________________________________________________________________
தேர்தல்கள் தரும் சேதிகளும் பாடங்களும்!
- தேவன் (கனடா) -
கடந்த 60 வருடமாக தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பிரதிநித்துவம் செய்யும் அரசியல் கட்சி என தம்மை சுயதம்பட்டம் அடிக்கும் தமிழரசுக் கட்சி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பலத்த அடி வாங்கியிருக்கிறது. ஆனால் கட்சியில் உள்ள சில பெரிசுகள் ‘விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை’ என்பதுபோல மக்கள் தமது கொள்கைக்கும் தேர்தலில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் அங்கீகாரம் என கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேட்பாளர் தான் கடந்த காலத்தில் என்ன செய்தார்? எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்? என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்? போன்ற விடையங்களை வைத்தே மக்களிடம் வாக்கு கோரப்படுவது உலக நடைமுறை யதர்த்தமாக இருக்கிறது. அத்துடன் வேட்பாளர்கள் சம்பந்தமான ஒழுக்கங்கள், நேர்மைகள் குற்றவியல் விபரங்கள் எல்லாம் ஆராயப்படும். ஆனால் தமிழ் சமூகத்திலோ இதற்கு நேர்மாறாகவே எல்லாம் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆறு சகாப்தமாக சலிப்பு ஏதும் இல்லாமல் ‘தமிழ் தேசியம்’ பேசு பொருளாக இருக்கிறது. அந்த வார்த்தை விமர்சனத்துக்கு அப்பால் புனிதமாக பேணப்படுகிறது. இந்த மாயமான் சொல்லாடலுக்குள் அனைத்து குளறுபடிகளும் அடக்கம் என்பது போல ஆலவாஆக தமிழ் அரசியல் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே ஒரு துரதிஷ்டம் என்னவென்றால் Public Morality, Credibility பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கடந்த 60 வருட அரசியல் வரலாற்றையும் பின்னடைவையும் கவனத்தில் எடுக்கும:போது நமது சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது எனும் கேள்வியை தவிர்க்க முடியவில்லை. (மேலும்) 23.04.10
____________________________________________________________________________________________
புதிய சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு
இலங்கையின் 7ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவினை பிரதமர் தி.மு. ஜயரட்ன முன்மொழிந்தார். எதிர்க்கட்சியின் உப தலைவர் கருஜயசூரிய வழிமொழிந்தார். இன்று காலை 8.00 மணிக்கு நாடாளுமன்ற முதலாவது அமர்வின் கூட்டத்தொடர் ஆரம்பமான போதே மேற்படி தெரிவு இடம்பெற்றுள்ளது. அதேவேளை, பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
____________________________________________________________________________________________
நெடுங்கேணி, ஒலுமடு மற்றும் மல்லாவி பகுதிகளில் கிணறுகளை துப்புரவு செய்து கொடுக்கும் பணியில் புளொட் உறுப்பினர்கள்-
புளொட் அமைப்பின் வேண்டுகோளுக்கமைய பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புடன் பெறப்பட்ட நான்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வடக்கில் மீள்குடியமர்ந்த மக்களின் கிணறுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தவகையில் அவற்றைக் கொண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நெடுங்கேணி, ஒலுமடு, பெரியமடு பிரதேசங்களிலுள்ள கிணறுகளைத் துப்புரவு செய்யும் பணிகளில் புளொட் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கிணறுகளில் நீர் இறைத்து துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் நெடுங்கேணி, ஒலுமடு பிரதேசம் மாத்திரமன்றி ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் இன்னுமொரு நீர் இறைக்கும் இயந்திரம் மல்லாவிப் பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள பாண்டியன்குளம், தேராங்கண்டல், ஐயங்குளம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பொதுமக்களின் கிணறுகளை இறைத்துக் கொடுத்து துப்புரவு செய்யும் பணிகளில் புளொட் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மல்லாவி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி நீர் இறைக்கும் இயந்திரங்களில் ஒன்று வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டிருப்பதுடன். அப்பிரதேசத்திலுள்ள கிணறுகளிலும் தண்ணீர் இறைக்கும் பணிகள் இடம்பெற்று கிணறுகள் துப்புரவாக்கப்பட்டு வருகின்றன. புளொட் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இப்பணிகளை புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் தலைமையிலான பிரதிநிதிகள் நேரடியாகப் பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்து வருவதுடன், நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கான எரிபொருள் உள்ளிட்ட மேலதிக தேவைகளையும் வழங்கி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து புளொட் உறுப்பினர்கள் வடக்கில் மீள்குடியமர்ந்த மக்களுக்காக கிணறுகளை இறைத்து துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________________________________
புது சீடருடன் செக்ஸ் சாமியார் நித்யானந்தா சிக்கினார்
ப ெங்களூரு : ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா, இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். குடிசை வீட்டிலிருந்த அவரும், அவரது சீடர் ஒருவரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம், 7,000 அமெரிக்க டாலர், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த தகவல் வெளியானது. இந்த தகவலால் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா தியான பீடம் உட்பட இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரமத்தின் ஒரு பகுதியில் இருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. நித்யானந்தா, ஹரித்வார் கும்பமேளாவிற்கு சென்றிருப்பதாக, ஆசிரமவாசிகள் தெரிவித்தனர். பிடதி தியான பீடத்திலிருந்து அவரது சீடர்கள் பலர் வெளியேறினர். சீடர்களில் ஒருவரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த நித்ய தர்மானந்தா என்கிற லெனின், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் கூறினார். நித்யானந்தா சம்பந்தப்பட்ட 'சிடி'யையும் அவரிடம் ஒப்படைத்தார். சாமியார் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, இயற்கைக்கு விரோதமாக செக்ஸ் உறவு வைத்தல், கொலை மிரட்டல், சதி செய்தல் என ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. (மேலும்) 22.04.10
____________________________________________________________________________________________
நாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியேற்றிய புலிக்கட்சித் தேர்தலும்
எஸ்.எம்.எம்.பஷீர்
ஒருபுறம் நாடுகடந்த தமிழீழ தனியரசுக்கான அடிப்படை கோட்பாடுகளை மிதக்கவிட்டு ருத்திரகுமாரன் வகையறாக்கள் படு அமர்க்களமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தேர்தல் நடாத்த முஸ்தீபுகள் செய்துவரும் வேளையில் முஸ்லிம்களுக்கு ஒரு தனியான தாயகம் உண்டு சுயநிர்ணய உரிமையை பிரயோகித்து அவர்கள் பிரிந்து செல்ல முடியும் என்றெல்லாம் போலியாகவேனும் வெளிப்படையாக சொல்கையில் அவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் அரசியல் விஞஞானி இம்தியாஸ் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை அவர்களின் அரசியல் அடிப்படை உரிமைகளை தனது மொழியை அடிப்படையாகக் கொண்ட அளவுகோலை வைத்து அழுத்தி மறைத்துவிட முனைகிறார். இந்த நிலையில் அதே காலகட்டத்தில் பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் வந்திருக்கிறது இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து புலம் பெயர் தமிழர்கள் முடிவெடுப்பது தொடர்பிலான பிரச்சாரங்கள் இன்னமும் சூடுபிடிக்கவில்லை. ஆனால் புலி சார்பு தமிழீழக்கனவில் மிதக்கும் புலம் பெயர் மக்களை அல்லது அதுபற்றி அசட்டை செய்யாதிருக்கும் மக்களை மீள தூண்டி இழுக்கும் ஊடக பணிகள் துரிதப்படுத்தப்படும். (மேலும்) 22.04.10
____________________________________________________________________________________________
ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை: சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு
இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.நாளை காலை 9.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது. சபையின் முதலாவது நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராகத் தெரிவு செய்யப்படும் நபர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏழாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர். இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு, ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத்தலைவர் தெரிவுகள் இடம்பெறும். நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதிகளில் நடைபெற்ற மீள் வாக்குப் பதிவுகளின் பின்னர் இன்று வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு, மற்றும் தேசியப் பட்டியல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 225 உறுப்பினர்களும் நாளை பாராளுமன்றம் செல்கின்றனர். (மேலும்) 22.04.10
____________________________________________________________________________________________
ரணில் மனோ உறவு முறிந்தது: கொடுத்த வாக்குறுதியை ரணில் மீறிவிட்டார்-மனோ கணேசன்
- பி.பி.சி. செய்தி
கொடுத்த வாக்குறுதியை ரணில் விக்ரமசிங்க அவர்கள் காப்பாற்றவில்லை எமக்கும் கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டார் அதனால் கூட்டணியிலிருந்து விலகுகிறோம் - பிரபா கணேசன்
இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகுவதாக மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணி வாக்களித்தபடி தேசியப் பட்டியலில் நியமனம் வழங்கப்படாததை எதிர்த்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தம்முடன் எழுத்துபூர்வகச் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நடந்து கொள்ளவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார். கொடுத்த வாக்குறுதியை ரணில் விக்ரமசிங்க அவர்கள் காப்பாற்றவில்லை எமக்கும் கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டார் அதனால் கூட்டணியிலிருந்து விலகுகிறோம். (மேலும்) 22.04.10
____________________________________________________________________________________________
நாட்டின் 14ஆவது பிரதமராக தி.மு ஜயரட்ன பதவியேற்றார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவருமான டி.எம்.ஜயரட்ன, இலங்கையின் 14ஆவது பிரதமராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதமர் பதவி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, பசில் ராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், இன்று சுபநேரத்தில் திமு என அழைக்கப்படும் டி.எம். ஜயரட்ன பிரதமராகப் பதவியேற்றிருக்கின்றார். அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர், புதிதாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசியல் பிரமுகர்கள் இதன்போது வருகை தந்திருந்தனர். திசாநாயக்க முதியான்சலாகே ஜயரட்ன, 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி பிறந்தார். கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயரட்ன 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் நடந்த ஆறாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, கால்நடை அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்து வந்தவராவார்.
____________________________________________________________________________________________
ஐ.தே.கவுடன் பிளவு : ஆளும் தரப்பு பேச்சுக்கு அழைப்பு ; மனோ கணேசன் அரசுடன் இணைவாரா?
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணையும் சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன. ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையே இதற்குக்காரணம் என்றும் கூறப்படுகின்றது. கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணியுடன் மனோ கணேசனின் ஜனநாயக தேசிய முன்னணி இணைந்துகொண்டது. ஜனாதிபதித்தேர்தேர்தலில் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது. எனினும்,அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் கூட்டுச்சேர்ந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணியொன்றை உருவாக்கியது. (மேலும்) 22.04.10
____________________________________________________________________________________________
ஆளும் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரின் பெயர் வெளியீடு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படும் உறுப்பினர்களின் பெயர்களை இன்று அறிவித்துள்ளது. ரட்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜயர்ட்ன, டலஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ், டி.ஏ.டபிள்யூ.குணசேகர, திஸ்ஸ விதாரண, கீத்தானஞ்சனன் குணவர்த்தன, எல்லாவல மேதானந்த தேரர், முத்து சிவலிங்கம், அச்சல ஜாகொட, விநாயகமூர்த்தி முரளிதரன், ஜெ.ஆர்.பி.சூரியபெரும, ஜனக பண்டார பிரியந்த, ரஜீவ விஜயசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், மாலினி பொன்சேகா, கமல ரட்னதுங்க ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
____________________________________________________________________________________________
பயிற்சியை முடித்து 41 தமிழ்ப் பொலிஸார் வெளியேற்றம்
ஆறு மாத கால பயிற்சியை நிறைவு செய்த தமிழ்ப் பேசும் 41 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று காலை உத்தியோக பூர்வமாக வெளியேறினர். மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூயில் பயிற்சியை நிறைவு செய்த பொலிஸ் வீரர்களுக்கான அணி வகுப்பு மரியாதை கல்லடி பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறும் ஆறாவது தமிழ்ப் பேசும் பொலிஸ் பிரிவினர் இவர்களாவர். இது தொடர்பான வைபவத்தில் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிப் பணிப்பாளர் அஜித் பண்டார பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கல்லடி பயிற்சிக் கல்லூரி பணிப்பாளர் எஸ். செல்வராசா உட்பட பலரும் கலந்து கொண்டனர். திறமையாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களூக்கு விருதுகளும் வழங்கப்பட்டன
____________________________________________________________________________________________
ஐரோப்பிய விமானச் சேவைகள் நிறுத்தம் : பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பு
ஐஸ்லாந்தின் எரிமலை வெடிப்பால் வான் பரப்பு பாதிக்கப்பட்டது. ஐரோப்பாவில் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பொருளாதார ரீதியாக உலக நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. விமான சேவைகள் நிறுத்தப்பட்டது முதல் இன்று வரை 60,000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. விமானப் போக்குவரத்துத் தொழிற்துறையே இதனால் ஸ்தம்பிதமடைந்துள்ளது. விமான நிறுவனங்களுக்கு இதனால், ஒரு நாளைக்கு 200 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, விமானப் போக்குவரத்துத்துறையில் மாத்திரமல்லாமல் வேறுவகையிலும், இந்த விவகாரம் பரந்துபட்ட உலக பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக விமானங்களின் மூலம் ஏற்றுமதியாகும் பழவகைகள், பூக்கள் மற்றும் மரக்கறி வகைகளின் ஏற்றுமதியும் இதனால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மாத்திரமல்லாமல், உணவுப் பொருட்களின் தயாரிப்பாளர்களும், விவசாயிகளும் கூட இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். (மேலும்) 21.04.10
____________________________________________________________________________________________
கண்டி மாவட்ட இறுதி முடிவுகள்
கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 339819வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 192798வாக்குகளையும் ஜனநாயக தேசிய முன்னணி 23728வாக்குகளையும் பெற்றுள்ளன. விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களும் ஐ.தே.கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
____________________________________________________________________________________________
விமான போக்குவரத்து சீராவதில் சிக்கல் : ஐஸ்லாந்து எரிமலையில் மீண்டும் சீற்றம்
லண்டன் : எரிமலைச் சீற்றத்தால் ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்தை, மீண்டும் இயக்குவதற்கு ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை எடுத்துள்ளது. இருந்தாலும், ஐஸ்லாந்து எரிமலையில் நேற்றும் சீற்றம் காணப்பட்டதால், விமானப் போக்குவரத்து மீண்டும் முழு அளவில் இயங்குவது கேள்விக் குறியாகியுள்ளது. ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை கடந்த 14ம் தேதி வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய தீக் குழம்புகள், அப்பகுதி முழுவதும் பரவியுள்ளன. எரிமலை வெடித்ததால், அங்குள்ள வான் பகுதியில் 11 கி.மீ., தொலைவுக்கு சாம்பல் புகை மண்டலம் பரவியுள்ளது. இந்த சாம்பல் மண்டலத்தால், அந்த வழியாகச் செல்லும் விமானங்களின் இன்ஜின்களுக்கு சேதம் ஏற்படும் என்பதால், கடந்த ஐந்து நாட்களாக ஐரோப்பாவிலும், அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பயணிகள், தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே முடங்கிக் கிடக்கின்றனர். விமான நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் விமான போக்குவரத்து அமைச்சர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று விவாதித்தனர். (மேலும்) 21.04.10
____________________________________________________________________________________________
நளினியிடம் இருந்து சிறையில் மொபைல் போன் பறிமுதல்
வேலூர் : வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி நளினியிடம் இருந்து மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைக்குள் மொபைல் போன் சென்றது எப்படி என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின், ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நளினியின் கணவர் முருகன் மற்றும் ராபர் பயாஸ் உள்ளிட்டபலர், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் 19 ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் நளினி, 'தன்னை விடுதலை செய்ய வேண்டும்' என, ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஐகோர்ட் உத்தரவுபடி அறிவுரை கமிட்டி அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால், முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு மறுத்து விட்டது. பெண்கள் சிறையில் நளினி அறையில் நேற்று காலை 8 மணிக்கு பெண்கள் சிறைசூப்பிரண்டென்ட் ராஜலெட்சுமி, துணை சிறை அலுவலர் லெட்சுமி ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.அப்போது நளினி வைத்திருந்த பையில் ஒரு மொபைல் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நளினி தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போது மேலும் இரண்டு சிம்கார்டுகள் சிக்கின. நளினியிடம், சிறைத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, 'தன்னிடம் மொபைல் போன் எப்படி வந்தது என தெரியவில்லை' என்று, நளினி கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (மேலும்) 21.04.10
____________________________________________________________________________________________
மக்களால் நிராகரிக்கப் பட்டவர்களும் பல் மொழியறிவும் உயர் கல்வியறிவும் அற்றோர் எப்படி எம்மை ஆள முடியும்?
சவுதியிலிருந்து ஹிபாஹ் ஹன்ஸிராஹ்
சமூக சிந்தனையும், சத்திய மார்க்கமும், பொதுநலனும், பல் மொழியறிவுடன் கூடிய உயர் கல்வியும், மக்கள் ஆதரவும், தற்றுணிவும், தன்னார்வமும், அடக்கமும் ஒருங்கே அமையப் பெற்றவர்களே பாராளுமன்றக் கதிரைகளுக்குச் சொந்தக் காரர்களாக வேண்டுமே தவிர கட்டாக்காலிகளும், கண்மண் தெரியாது பதவியை துஷ்ப்பிரயோகம் செய்வோரும், தன் குடும்பம் உறவினர், சுற்றத்தார் என்று தேர்ந்தெடுத்து அரசின் உதவிகளையும் உரிமைகளையும் ஒரேயிடத்தில் அள்ளிக் குவிக்கும் “அரசியல் புலிகளுக்கு” கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு மகா சிறந்ததே. காலம் காலமாக கதிரை நம்மை விட்டுப் போகாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் கிட்டத் தட்ட 25 சத வீதமானோர் மக்களால் ஒட்டுமொத்தமாக தூக்கி வீசப்பட்டிருப்பது இலங்கை அரசியல் வரலாற்றில் பதியப் பட வேண்டிய முக்கிய விடயமே. இருந்தாலும் கூட மூலதனமின்றியே கடந்த காலங்களில் அரசியல் வியாபாரம் செய்து சொர்க்கபுரி வாழ்வு வாழ்ந்தவர்கள் அச் சுகம் கை நழுவிப் போனதையிட்டு கவலையடைந்திருப்பார்கள் என்று நினைத்தால்... அது தான் இல்லை... கட்சித் தலைமைகளிடம் ஐயா சாமி என்று பிச்சை கேட்கிறார்கள். ஆனாலும் அரச தலைவரும், பிரதான எதிர்க் கட்சித் தலைவரும் எடுத்திருக்கின்ற முடிவுகள் தான் நாளை சிறந்தவொரு திருநாட்டைக் கட்டியெழுப்ப போடப்படுகின்ற அடித்தளம் என்றால் அறிவுடையோர் யாவரும் இதன் உட்கிடையை அறிந்து கொள்வர். (மேலும்) 21.04.10
____________________________________________________________________________________________
திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள் ; இரா.சம்பந்தனுக்கு முதலிடம்
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் அதிகப்பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப்பெற்று முதலிடம் வகிக்கின்றார்.இரா.சம்பந்தனுக்கு கிடைத்திருக்கும் மொத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 24,488 ஆகும். ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சின்ன தௌபீக் 23,588 வாக்குகளைப்பெற்று இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான சுசந்த புஞ்சி நிலமே 22,820 விருப்பு வாக்குகளையும் , எம்.கே.டி.எஸ்.குணவர்தன 19,734 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
____________________________________________________________________________________________
திருகோணமலை தேர்தல் முடிவு
- பி.பி.சி செய்தி
இலங்கையில் மறுவாக்குப்பதிவை அடுத்து இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி திருகோணமலை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை பெறுகின்றது. அடுத்த இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், அதனையடுத்த இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இருக்கின்றன. இருந்தபோதிலும், திருகோணமலை மாவட்டத்துக்கான ஒட்டுமொத்த முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே அங்கு ஆகக்கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளது. அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அந்த மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களும், இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன. இலங்கையில் தேர்தல் முறைகேடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இரு பகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்புகள் இன்று நடந்து முடிந்திருக்கின்றன. (மேலும்) 21.04.10
____________________________________________________________________________________________
திருகோணமலை மாவட்ட இறுதி முடிவுகள்
திருகோணமலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 59784 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 39691 வாக்குகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 33268 வாக்குகளையும் பெற்றுள்ளன. விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்களும் ஐ.தே.க, த.தே. கூட்டமைப்பு ஆகியவற்று முறையே 1ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
____________________________________________________________________________________________
ஈரான் மீது தடை விதிக்க இந்தியா - சீனா - ரஷ்யா - பிரேசில் - தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு அமெரிக்க முயற்சி தோல்வி
 அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபடுவதை காரணம் காட்டி அந்நாட்டின் மீது மீண்டும் கடுமையான தடைகளை விதிக்க வேண்டுமென அமெரிக்காவும், அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் தொடர்ந்து கடுமையாக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகின் மிகப் பெரும் மக்கள் தொகைக் கொண்ட நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவையும், அவற்றுடன் தென்னாப்பிரிக்காவும் இணைந்து, அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இது சர்வதேச அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது தடைகள் விதிப்பதால், அந்த நாட்டின் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதை தவிர வேறு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்றும், ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மட்டுமே பொருத்தமானவையாக இருக்கும் என்றும் மேற்கண்ட நான்கு நாடு களும் வலியுறுத்தியுள்ளன. கடந்த ஏப்ரல் 15ம்தேதி பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் ‘பிரிக்’ எனக் கூறப்படும் பிரேசில் - ரஷ்யா - இந்தியா - சீனா ஆகிய நாடுகளின் தலை வர்கள் லூலா, மெத்வதேவ், மன் மோகன் சிங், ஹு ஜிண்டாவோ ஆகியோர் கலந்து கொண்ட முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. (மேலும்) 20.04.10
____________________________________________________________________________________________
இணக்க அரசியலின் முக்கியத்துவம்
நிபந்தனைகளின் அடிப்படையில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருமலையிலுள்ள அவ ரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாடொன்றில் கூறியிருக்கின்றார். ஐக்கிய இலங்கையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வைத் தர வேண்டும் என்பதும், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றி அவர்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளாகத் தோன்றுகின்றன. கூட்டமைப்பின் முடிவும் அது முன்வைத்துள்ள நிபந்தனைகளும் நியாயமானவை. தமிழ் மக்களின் அபிலாஷைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளாக முன்வைத்திருக்கின்றது. இவற்றை எவ்வாறு வென்றெடுக்கலாம் என்பதையிட்டுத் தெளிவான நிலைப்பாடு தேவை. இவற்றை அரசாங்கம் செய்து முடித்தால்தான் அரசாங்கத் துடன் ஒத்துழைப்பு என்ற நிலைப்பாட்டைக் கூட்டமைப்பு எடுக்குமேயானால் அது தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான நிலைப்பாடாக இருக்காது. முதலில் அரசாங்கம் அதன் பொறுப்பை நிறை வேற்ற வேண்டும் என்ற கடந்தகால அனுபவம் துயரகர மான பலனையே தந்தது. இது எதிர்ப்பு அரசியல். இணக்க அரசியலின் மூலமாகவே அரசியல் தீர்வை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். (மேலும்) 20.04.10
____________________________________________________________________________________________
பிரபா தாயார்- கருணாநிதி விளக்கம்
- B.B.C News
வ ிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பினால் அக்கோரிக்கையினை பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தமது அரசு தயாராக இருக்கிறது என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்திருக்கிறார். கடந்த வெள்ளியன்றிரவு பார்வதியம்மாள் மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது, குடியேற்றத்துறை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் குறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும், அது முழுக்க முழுக்க மத்திய அரசு தொடர்பான பிரச்சினையென்றும் கூறினார். செய்தித் தாள்கள் மூலமாக மறு நாள்தான் தனக்கு முழுவிவரம் கிடைத்ததாகச் சொன்ன அவர், வேறொரு இடத்தில் இரவு 12 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனே விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்குள் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகத் தனக்கு சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். (மேலும்) 20.04.10
____________________________________________________________________________________________
இனப்பிரச்சினைக்கு தீர்வு: தேர்தல் அரசுக்கு தந்திருக்கும் அரிய வாய்ப்பு
- 14.04.2010 தாயகக்குரல்.
பொதுவாக எந்த ஒரு சமூகத்தை சேர்ந்த மனிதமனமும் ஏதாவது ஒரு நம்பிக்கையின் பின்னால் ஒவ்வொரு கால கட்டத்தில் திரண்டெழும். அப்போது தாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை அவர்களால் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஹிட்லரின்முன் ஜெர்மனியர்கள் வசப்பட்டதும் மனிதமனத்தின் இயல்பான சுபாவமே. அதன் விளைவு குறித்து அவர்களிடம் இருந்த புரிதலின்மைதான் இதன் காரணம் எல்லாம். உலகின் எல்லா சமூகமும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இந்த விபத்துக்கு ஆட்பட்டு வருகின்றன என்று ஒரு அறிஞர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பொது தேர்தலில் எதிர்பார்த்தபடி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வேற்றியீட்டியுள்ளது. வெளிநாட்டு அழுத்தங்கள் ஒரு புறம் ஜெனரல் சரத் பொன்சேகா கைது விவகாரத்தை வைத்து எதிர்கட்சிகள் நடத்திய போராட்டங்கள் ஒருபுறம் என பல அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசு மீண்டும் ஆட்சியை அறுதிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் பல புதிய முகங்கள் தெரிவாகியுள்ளனர். புதிய தலைமுறையினரின் அரசியல் பிரதிநித்துவம் எதிர்காலச் சந்ததியினரைப்பற்றி சிந்திக்க வைக்கலாம் என்பதால் இனப்பிரச்சினை தீர்வுக்கு சாதகமான சூழ்நிலை அமையலாம். (மேலும்) 20.04.10
____________________________________________________________________________________________
கிளிநொச்சி கிழக்கில் அடுத்தவாரம் மீள்குடியமர்வு
கிளிநொச்சி கிழக்குக்கான மீள்குடியேற்றப் பணிகளை அடுத்துவரும் ஒரு வாரகாலத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார். மோதல்களின்போது இடம்பெயர்ந்தவர்கள் இதுவரை கிளிநொச்சி மேற்கிலேயே குடியமர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதற்தடவையாக எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியினுள் கிளிநொச்சி கிழக்கிலும் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்பட விருப்பதாக அவர் கூறினார். கிளிநொச்சி கிழக்கில் ஒரு மாத காலப்பகுதிக்குள் ஆகக்குறைந்தது 2,900 குடும்பங்களை மீளக் குடியேற்றும் வகையில் அதற்கான ஒழுங்குகளை அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருகிறது. தற்போது அப்பகுதியில் திருவையாறு, கனகாம்பிகை குளம், ரத்தினபுரம் மற்றும் மருத நகர் ஆகிய இடங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் கிளிநொச்சி கிழக்கைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஒரு வார காலப்பகுயினுள் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவரெனக் கூறிய அரச அதிபர் ஏனைய பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
____________________________________________________________________________________________
புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியை முறியடிக்க புதிய அரசு ஆயத்தமாக இருக்கவேண்டும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு வெளிநாடுகளில் இயங்கும் பிரிவினைவாதிகள் மேற்கொள்ளும் முயற்சியை முறியடிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தயாராக இருக்கவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலிகளை மீளக்கொண்டு வந்து அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு சர்வதேச சமூகத்தின் ஒருபகுதியினர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனைக் கூறியுள்ளார். கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது;பிரிவினைவாத இயக்கத்தை அடக்குவதும் அதன் பிரசாரத்தை உரிய முறையில் கையாள்வதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் தந்திரோபாயத்தின் பிரதான அங்கமாக இருக்கவேண்டும். அரசியல் விளைவுகளை பொருட்படுத்தாமல் பிரிவினைவாத உணர்வுகளை மேம்படுத்தும் உள்நாட்டு சக்திகளுக்கு எதிராக புதிய அரசாங்கம் முழு அளவில் செயற்பட வேண்டும். (மேலும்) 19.04.10
____________________________________________________________________________________________
தொப்புள்கொடி உறவைக் கருத்தில்கொண்டு யாழ்ப்பாண அபிவிருத்தியில் இந்தியா அதிக கரிசனை மே 5 இல் விசா அலுவலகம் அங்குரார்ப்பணம்
இந்திய தூதுவர் அசோக் காந்தாயாழ்.குடாநாட்டுக்கும் தமிழகத்திற்கும் இடையில் தொப்புள்கொடி உறவு இருப்பதைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாண அபிவிருத்தியில் இந்தியா அதிகளவுக்கு அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, மே 5 ஆம் திகதி முதல் இந்திய விசா வழங்கும் அலுவலகம் திறந்து வைக்கப்படவிருப்பதாகவும் அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தமது உரையில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.இந்தப் புதிய அலுவலகம் அங்கு திறக்கப்பட்டதும் குடாநாட்டு மக்கள் விசா விண்ணப்பங்களை அங்கு பெற்றுக்கொண்டு திரும்பக் கையளிக்க முடியும்.கொழும்புக்குப் பயணம் செய்வதற்குப் பதிலாகத் தமது விண்ணப்பங்களை யாழ்ப்பாண அலுவலகத்திலேயே இனிமேல் சமர்ப்பிக்கக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் உட்கட்டமைப்பின் அபிவிருத்தியில் இந்தியா கூடுதல் அக்கறை கொண்டிருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் (மேலும்) 19.04.10
____________________________________________________________________________________________
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணக்கப்பாட்டுக்குத் தயார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் அரசுடன் நெருங்கி உறவாடத்த் தயார் என்று நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற ஊடக மகாநாட்டில் தெரிவித்தது. அரசாங்கம் நல்லதொரு அரசியல் தீர்வை பிளவுபடாத நாடு ஒன்றினுள் தமிழ் சமூகத்திற்கு கொடுக்குமாயின் தாம் தயார் என அந்த அரசியல் கட்சி நேற்று கொள்கை வெளியிட்டது. எனினும் பழம் பெரும் தலைவர் இரா சம்பந்தன் பத்திரிகையாளரிடம் பேசும் போது அவர்களது கூட்டம் அரச கூட்டத்துடன் பாராளுமன்றத்தில் இணையுமா என்று தெளிவாக குறிப்பிடவில்லை.
____________________________________________________________________________________________
நாடு கடந்த தமிழீழமும் நாக்கு நுனிக்கண் நறுந்தேன் நயவஞ்சகர்களும்
எஸ்.எம்.எம்.பஷீர்
நாடு கடந்த தமிழீழம் எனும் வெற்றுத் தீர்மானம் பற்றி நமக்கென்ன கவலை என்று வாளாவிருந்தால் இந்த தமிழ் அறிவு சீவிகள் எம்மை சும்மாவிடமாட்டார்கள் போல் தெரிகிறது அதனால்தான் அது குறித்து நாமும் எழுதாமலிருக்க முடியவில்லை. நாடு கடந்த தமிழ் ஈழ கருத்தியலாளர்கள் (கே பீ உட்பட) முதன்முதலில் தற்காலிக தமிழ் ஈழ எண்ணக்கருவை பிரபாகரன் வைகாசியில் வைகுண்டம் ஏகி சுமார் இரு மாதத்தின் பின்னர் வெளியிட்டனர். பிரபல சர்வதேச இன்டர்போல் தேடும் கேடியான கே பியின் பின்பலத்துடன் புலம் பெயர் தமிழ் பேராசிரியர் கூட்டமும் ஓரிரு வெளிநாட்டு புலிசார்பு கல்விமான்களும் சேர்ந்து சுடச்சுட விட்ட அறிக்கையில் தமது எதிர்கால தமிழ் ஈழத்திற்கான நியாயங்கள் முன்வைக்கப்பட்டன. ஹக்கீமின் மொழியில் சொல்வதானால் புலிகள் தோற்கலாம் அவர்களது போராட்ட நியாயங்கள் தோற்கமுடியாது என்பதை இந்த புலன் பெயர் புத்திசீவிகளும் தாங்கள் சீவிக்கும் காலம் வரையாவது பிரபாகரனை கட்டியழ கட்டியம் கூறியதாகவே இந்த அறிக்கை தோன்றியது வழக்கம்போல் தனது மாவீரர் உரைகளில் பிரபாகரன் தவறாது குறிப்பிடும் திம்பு வட்டுக்கோட்டை வரலாறும் கோடிட்டு காட்டப்பட்டிருந்தது இந்த அறிக்கையில் குறிப்பிடும் வரலாறுகளில் நாங்கள் தலையிடவில்லை ஆனால் இந்த அறிக்கை குறிப்பிடும் எந்த விடயமும் எங்களை (முஸ்லிம்களை) உள்ளடக்கவில்லை என்பதுடன் எங்களை ஒரு இனமாக கருதாவிட்டாலும் பரவாயில்லை (அன்றைய காலகாட்டங்களில்) ஒரு தனித்துவ சமூகமாகத்தானும் கண்டு கொள்ளவில்லை. அந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது (மேலும்) 19.04.10
____________________________________________________________________________________________
நோர்வேயில் இலங்கை தூதரகம் தாக்குதல்;8 தமிழர்களுக்கு எதிராக வழக்கு
நோர்வே நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தை கடந்த வருடம் தாக்கியமை தொடர்பில் எட்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரசன்னா பற்குணம், அந்தோனி ஜோகானந்தன் தேவராஜ், கிருஷ்ணகுமார் தர்மலிங்கம், இன்பராஜா தேவராசா, சஜிந்தன் பார்வதிதாசன், விதுசன் சுரேஷ், ஜெஸ்வந் புஸ்பராஜா, கௌதம் கருணாகரன் ஆகியோருக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டிருந்தது. இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த எட்டுப் பேரில் ஒருவர் நோர்வேயில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றஞ்சாட்டுள்ள எட்டு பேரில் ஒருவரைத் தவிர ஏழு பேருக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக இதுவரையில் எவரும் முன்வரவில்லை. இதேவேளை, நோர்வேயிலுள்ள தமிழ்ச் சமூகம் இந்தத் தாக்குதலை கண்டித்திருப்பதுடன், இவர்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.
____________________________________________________________________________________________
பொன்னான வாய்ப்பு
புத்தாண்டு பெரும் நம்பிக்கையோடும் புதிய எதிர்பார்ப்புகளுடனும் பிறந்திருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் மூலம் மிகவும் உறுதியான அரசாங்கமொன்றுக்கு மக்கள் ஆணை வழங்கி இருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்த லைத் தொடர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மக்கள் வழ ங்கி இருக்கின்ற மிகப் பெரிய அங்கீகாரம் இது. நடைமுறையிலுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ் அறுதிப் பெரும்பான்மையுடன் அரசாங்க மொன்று அமைக்கப்படவுள்ளதென்பது நமக்கெல்லாம் ஆச்சரியப்படக்கூடிய விடயம். ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சத்திற்கு அதிகமான வாக்குக ளால் வெற்றியீட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலமைப்பை மாற்றப் போவதாக அறிவித்தார். அதற் கேதுவாக, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்களிடம் மனந்திறந்து அங்கீகாரமும் கோரினார். பொதுத் தேர்தல் மூலம், இதற்கு மக்கள் பச்சைக்கொடி காட்டி யிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் அரசுக்குக் கிடைத்திருக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி, 117 ஆசனங்களை ஐ.ம.சு.மு. பெற்றிருக்கிறது. நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டிப் பகுதியில் ஏற்பட்ட தேர்தல் வன்முறைகள், குளறுபடிகளால் மீள் வாக்குப் பதிவுக்கு தேர்தல்கள் ஆணையாளர் உத்தர விட்டார். (மேலும்) 19.04.10
____________________________________________________________________________________________
கொழும்பு-ஐரோப்பிய விமான சேவைகள் பல இரத்து
ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை கக்கிய புகை மண்டலம் வான்பரப்பில் பரவியதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் சுமார் 17ஆயிரம் விமான சேவைகளைச் இரத்துச் செய்துள்ளதாக ஐரோப்பிய விமான சேவை கட்டுப்பாட்டு அமைப்பான யூரொகண்ட்ரோல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக லண்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நகரங்களுக்கு கொழும்பிலிருந்து இயக்கப்படும் பல விமான சேவைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னராக தமது பயண ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு விமான சேவை குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பியாவில் பரவியுள்ள புகைமண்டலம் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதக் காரணமாகவே இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. (மேலும்) 19.04.10
____________________________________________________________________________________________
தீர்வு என்று வரும்போது அனைவருடனும் பேசவேண்டும்: டியூ குணசேகர
தமிழ் மக்களின் பிரச்சினை என்பது ஒரு தேசியப் பிரச்சினை. தமிழ் மக்களின் பிரச்சினை என்பதால் தமிழ்க் கட்சிகளுடன் கட்டாயம் பேசப்படவே வேண்டும். ஆனால், தீர்வு என்று வரும்போது அனைத்துக் கட்சிகளுடனும் பேசித்தான் தீர்வு காண வேண்டும். தமிழ் மக்கள் ஆதரிக்கும் கட்சிகளுடன் என்று மட்டுமல்லாமல் தமிழ் மக்களை ஆதரிக்கும் கட்சிகளுடனும் பேசப்பட வேண்டும். அந்த வகையில் எமது கட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம். எமது கட்சிப் பிரதிநிதிகள் தமிழ்பேசும் மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளாக இருக்கலாம். ஆனால், தேசியப் பிரச்சினை என்று வரும்போது அனைவருடனும் பேசப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஆதரித்துள்ளனர் என்பதற்காக அவர்கள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூற முடியாது. நாங்கள் இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். (மேலும்) 19.04.10
____________________________________________________________________________________________
இந்திய விஸா நிலையம் மே 5 முதல் யாழில் இயங்கும்
இந்திய விஸா நிலையமொன்று எதிர்வரும் மே மாதம் முதல் யாழ் ப்பாணத்தில் இயங்கவுள்ளது. இந்த நிலையம் மே மாதம் 5ம் திகதி திறந்து வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியாவின் தூது வர் அசோக் கே. காந்த் நேற்று தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மத்திய கல்லூரி யில் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். யாழ். குடா நாட்டு மக்கள் இந்த நிலையத்தில் விஸா விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவற்றைக் கையளிக்கவும் முடியும். இதன்படி விஸாவைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரால யத்திற்கு செல்ல வேண்டும் என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
____________________________________________________________________________________________
அரசியலில் கூடுதல் அனுபவம், தகுதி உள்ளவர்களுக்கே அமைச்சர்கள் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் ஜனாதிபதி
ப ுதிய அமைச்சரவையில் 35 முதல் 38 பேர் அமைச்சர்களாகப் பதவிவகிப்பர். நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப் பட்டுள்ளவர்களில் கூடுதல் தகுதி, அனுபவம் மற்றும் திறமையுள்ளவர்களே அமைச் சர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தக வலைத் தெரிவித்துள்ளார். "திவயின' சிங்கள நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார். சிரேஷ்ட மற்றும் தகுதியானவர்களுக்கே அமைச்சர் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும். அமைச்சர்களை நியமிக்கு முன்னர் சிரேஷ்ட உயர் அரச அதிகாரி களின் கருத்துக்கள் கேட்கப்படும். அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும் அமைச்சர் நியமனம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் விவகாரங்களில் தேர்ச்சி பெறுவது மிகவும் முதன்மையான அவசியமான தேவை என்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார். அமைச்சர்கள் நியமனத்தின்போது அரசியலில் கூடுதல் அனுபவம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தைக் கேட்டு அதனடிப்படையில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என்றும் ஜனாதிபதி சொன்னார். புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி நாளை ஞாயிற்றுக்கிமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அலுவல்களில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் புதிய எம்பிக்களுக்கு விளக்கவுரை நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
____________________________________________________________________________________________
இலங்கையின் பல பகுதிகளில் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றம் அவுஸ்திரேலிய பிரதமர் கூறுகிறார்
வழமையாக இருந்ததிலும் பார்க்க இலங்கையின் பல பகுதிகளும் ஆப்கானிஸ்தானும் அமைதியாக இருப்பதாகவும் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது இந்த விடயம் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் கூறியுள்ளார். பாதுகாப்பு நிலைவரம் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில் அதிகளவிலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் கெவின் ரூட் கூறியுள்ளார்.சிட்னியிலிருந்து சாரா என்பவர் விடுத்த தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளிக்கும் போதே கெவின் ரூட் இதனைத் தெரிவித்துள்ளார். தான் தமிழரெனவும் படிமுறையான அடக்குமுறையினால் இலங்கையை விட்டு நான் வெளியேறியதாகவும் சாரா கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த கெவின் ரூட், புகலிடம் கோருவோர் தொடர்பான கொள்கை முழுமையாக மாற்றப்பட்டிருக்கவில்லை எனவும் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்கள் உண்மையற்றவையாயின் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் ரூட் தெரிவித்திருக்கிறார். (மேலும்) 18.04.10
____________________________________________________________________________________________
கனடாவில் நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் ஈழவேந்தனும் போட்டி!
நாடு கடந்த அரசுக்கான கனேடியத் தேர்தலுக்காக மொத்தம் 43 பேர் வேட்புமனுக்க ளைத் தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது. இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. கனடாவின் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்த னும் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படு கின்றது. அத்துடன் தமிழர் தகவல் ஆசிரியர் மு.திருச்செல்வம், கலாநிதி சிறிஸ்கந்தராஜா, ஜோ.அன்ரனி, பொன் பால்ராஜன் உள்ளிட்ட வர்களும் போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே ஐக்கிய ராஜ்ஜியத்துக்கான நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர் தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
_
|